ADDED : மே 06, 2014 04:07 PM

அயோத்திக்கு ஈடாக விளங்கும் தலம் வடுவூர். தென்னக அயோத்தி அழைக்கப்படும் இத்தலத்திலுள்ள உற்ஸவர் ராம பிரானால் செய்யப்பட்ட பெருமை மிக்கது.
தல வரலாறு: ராமன் சீதை வனவாசம் வந்த போது, காட்டில் வாழ்ந்த கண்வ மகரிஷி உள்ளிட்ட முனிவர்களைக் கண்டனர். தரிசனம் பெற்ற அவர்கள், தங்களை விட்டு ராமர் செல்லக் கூடாது என வேண்டினர். அவர்களைச் சமாதானம் செய்ய விரும்பிய ராமர், தனது உருவத்தை அழகிய சிலையாக வடித்து, தான் தங்கிய இடத்தின் வாசலில் வைத்து விட்டார். மறுமுறை ராமரைக் காண வந்த முனிவர்கள் சிலையின் அழகைக் கண்டு மனம் பறி கொடுத்தனர்.
'' ராமா! உயிரோட்டம் மிக்க இச்சிலை அழகாக இருக்கிறதே! இந்த மங்கள விக்ரஹத்தை பூஜிக்கும் பாக்கியம் எங்களுக்கு வேண்டும்!'' என்று கேட்டனர். ராமரும், ''அப்படியா! உங்களுடன் நான் இருப்பதைவிட இச்சிலை இருப்பதையே விரும்புகிறீர்கள் போலும்!'' என்றபடி சிலையை வழங்கி விட்டுப் பயணத்தை தொடர்ந்தார்.
பிற்காலத்தில், திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த மக்கள் ராமரை வழிபட்டு வந்தனர்.
அந்நியர் படையெடுப்பின் போது, பாதுகாப்பிற்காக சிலைகளை தலைஞாயிறு என்னும் தலத்தில் புதைத்து வைத்தனர். காலப்போக்கில் ஒருநாள், தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரின் கனவில் ராமர் தோன்றினார். தான் புதையுண்டு கிடக்கும் இடத்தைக் குறிப்பிட்டதோடு, தனக்கு ஒரு கோயில் எழுப்பவும் உத்தரவிட்டார். அதன்படி தலைஞாயிறு சென்ற மன்னர் சிலையை மீட்டு வரும் வழியில், இரவு நேரமாகி விட்டது. அதனால், வடுவூர் பகுதியில் தங்க நேர்ந்தது.
அந்த ஊர் மக்கள், ராமரை இந்த ஊரிலேயே பிரதிஷ்டை செய்ய விரும்பினர். சம்மதித்த மன்னரும், சிலையை கொடுத்து விட்டுச் சென்றார். பிற்காலத்தில் புஷ்பக விமானத்தின் கீழ் கோதண்ட ராமரைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர்.
புனர்பூச திருமஞ்சனம்: கருவறையில் ராமபிரான், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயருடன் காட்சி தருகிறார். மார்பில் மகாலட்சுமி பதக்கம், சாளக்கிராம மாலை அழகு செய்கிறது. ராமரின் நட்சத்திரமான புனர்பூசத்தில், திருமஞ்சனம் சிறப்பாக நடக்கிறது. முன் மண்டபத்தில் ருக்மணி, சத்யபாமாவுடன் கோபாலன் வீற்றிருக்கிறார். ராமருக்கு கோயில் கட்டும் முன்பு, இவரே இங்கு கோயில் கொண்டு இருந்தார். ஹயக்ரீவர், விஷ்வக்÷Œனர், ஆண்டாள், ஆழ்வார்கள் சந்நிதிகளும் உள்ளன.
கோயிலுக்கு அருகில் சரயு புஷ்கரணி உள்ளது. ராமரின் ஜென்ம பூமியான அயோத்திக்கு நிகராக விளங்குவதால், இத்தலம் தட்சிண அயோத்தி என அழைக்கப்படுகிறது. சித்ராபவுர்ணமியை முன்னிட்டு ராமருக்கு, @ம.14ல் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. காலை 7.00க்கு திருமஞ்சனம், 9.00க்கு தாயார் புறப்பாடு, 10.00க்கு ஊஞ்சலில் மாலை மாற்றுதல், 11.00க்கு திருக்கல்யாண உற்ஸவ ஹோமம், மதியம் 12.00 க்கு திருமாங்கல்ய தாரணம் நடக்கிறது.
இருப்பிடம்: தஞ்சாவூர்- மன்னார்குடி ரோட்டில் 24 கி.மீ.,
திறக்கும் நேரம்: காலை 7.30 - பகல் 12.30, மாலை 4.30 - 8.30.
போன்: 04367 - 267 110.
