
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்பகோணம் அருகிலுள்ள திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயில் எண்ணற்ற சிறப்புக்களைக் கொண்ட தலம். தைப்பூசத்தன்று இங்கு 63 நாயன்மார் பவனி வருவர்.
தல வரலாறு:
சந்திரன், தனது குருவான பிரகஸ்பதியின் மனைவி மீது ஆசை கொண்டான். இதனால், அவனுக்கு தோஷம் உண்டானது. தோஷம் நீங்க மகரிஷிகளின் ஆலோசனைப்படி இத்தலம் வந்து சிவனை வேண்டி தவமிருந்தான். தவறு செய்தவர்கள் திருந்தினால் மன்னித்தருளும் மகாலிங்க சுவாமி அவனுக்கு விமோசனம் அளித்தார். சந்திரன் இங்கு வந்தபோது அவனது மனைவியர்களான 27 நட்சத்திரங்களும் உடன் வந்தனர். சந்திரனுக்கு அருளிய சிவன், நட்சத்திர நாயகிகளையும், இங்கு தோன்றிய 27 லிங்கங்களில் ஐக்கியமாக்கினார். இந்த லிங்கங்கள் ஒரே சந்நிதியில் உள்ளன. பிறந்தநாளில், அவரவருக்குரிய நட்சத்திர லிங்கத்தின் முன்பு பக்தர்கள் நெய் விளக்கேற்றுகின்றனர். மருத மரத்தை தலவிருட்சமாக கொண்ட தலங்கள் மூன்று. வடக்கிலுள்ள ஸ்ரீசைலம், தெற்கில் திருநெல்வேலி மாவட்டத்தில் திருப்புடைமருதூர், மத்தியில் அமைந்ததால் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சிவாலயங்கள் இந்தவரிசையில் வருகின்றன.
ஏழு பிரகார கோயில்:
பெருமாள் கோயில்களில் ஸ்ரீரங்கம் ஏழு பிரகாரம் கொண்டது. அதுபோல், சிவாலயங்களில் ஏழு பிரகாரம் கொண்டது இது. கோபுரம், பிரகாரம், கிணறு என அனைத்தும் 7 என்ற எண்ணிக்கையில் உள்ளது.
பாவம் நீங்க வழி:
வரகுணபாண்டியன் அறியாமல் செய்த கொலைக்காக, பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டான். விமோசனத்திற் காக இத்தலம் வந்து மகாலிங்கசுவாமியை வழிபட்டான். சிவன் அவனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியை அகற்றினார். பிரம்மஹத்திக்கு, சிவன் சந்நிதி இரண்டாம் கோபுரத்தில் சிலை உள்ளது. அறியாமல் பாவம் செய்த பாவம் நீங்க இதற்கு உப்பு, மிளகிட்டு வேண்டிக்கொள்கிறார்கள்.
அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி:
தட்சிணாமூர்த்தி எங்கும் தனித்தே இருப்பார். இத்தலத்தில் அம்பிகையுடன் காட்சி தருகிறார். இவரை 'சாம்ப தட்சிணாமூர்த்தி' என்பர்.
மூகாம்பிகை:
மூகாசுரனை வதம் செய்த மூகாம்பிகை, அந்த பாவம் நீங்க இங்கு சிவனை வழிபட்டாள். சிவன் அவளுக்கு விமோசனம் கொடுத்து மணந்து கொண்டார். இவளுக்கு இங்கு சந்நிதி இருக்கிறது. வைகாசி உத்திரம் நட்சத்திரத்தன்று இவர்களது திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. மூகாம்பிகை அருகில் மகாமேரு சன்னதி உள்ளது. பவுர்ணமியன்று மேருவுக்கு அபிஷேகம் செய்வர்.
அன்பிற்பிரியாள்:
திருஞானசம்பந்தர் இத்தலம் வந்தபோது, வழியெல்லாம் சிவலிங்கமாகத் தோன்றியது. எனவே தரையில் கால் பதிக்க அவர் அஞ்சினார். அப்போது, சிவன் அம்பிகையை அனுப்பினார். அவள், சம்பந்தரை இடுப்பில் தூக்கி வந்தாள். இந்த அம்பிகை அன்பிற்பிரியாள் எனப்படுகி றாள். பிரகாரத்தில் மருதவாணருடன் (சிவன்), கைலாயத்தின் மீது காட்சி தருகிறாள். அம்பாள் பெருநல மாமுலையாம்பிகைக்கு தனி சந்நிதி உள்ளது.
தைப்பூச சிறப்பு பூஜை:
சிவபூஜை செய்யும் முறை குறித்து மகரிஷிகள், சிவபெருமானிடம் விளக்கம் கேட்டனர். அவர்களுக்காக சிவன், தனது லிங்கத்திருமேனியை பூஜித்துக் காட்டினார். இந்த விழா தைப்பூசத்தை ஒட்டி நடக்கும். அர்ச்சகர்கள் இந்த வைபவத்தை பாவனையாக நடத்துவர். போனவழியில் திரும்பக்கூடாது: இக்கோயிலுக்குள் எந்த வழியில் சென்றோமோ, அதே வழியில் திரும்பக்கூடாது என்பது விதி. சிவன் சந்நிதி எதிரிலுள்ள கோபுரம் வழியாக நுழைந்து, படித்துறை விநாயகரை வணங்கி, சிவன், அம்பாள் சந்நிதிகளுக்குச் சென்று, பின்பு மூகாம்பிகை சந்நிதியுடன் தரிசனத்தை முடிக்க வேண்டும். வேறு வாசல் வழியாக வெளியே வர வேண்டும். இதற்கு ஒரு காரணம் உண்டு. ஏதேனும் பீடைகள் மனிதனுக்கு இருந்தால், அது நுழைவு வாசலில் நின்று கொள்ளும். கோயிலை விட்டு வெளியேறியதும் மீண்டும் தொற்றிக் கொள்ளும். வேறு வாசல் வழியாக வந்து விட்டால் அது அவனைப் பீடிப்பதில்லை. இவ்வாறு நலமான வாழ்வு பெற இப்பழக்கம் இக்கோயிலில் உள்ளது.
வேல் சந்நிதி:
முருகன் கோயில்களில் சுவாமி கையில் வேலுடன் காட்சி தருவார். சில கோயில்களில் அவருக்கு எதிரில் வேலை பிரதிஷ்டை செய்திருப்பர். இக்கோயிலில் இரண்டாம் பிரகாரத்திலுள்ள வேம்படி முருகன் சந்நிதி எதிரே வேலுக்கென தனி சந்நிதியே இருக்கிறது. சந்திரன் வழிபட்ட தலமென்பதால், நவக்கிரக சந்நிதியிலுள்ள சந்திரன் மட்டும் பெரிய மூர்த்தியாக வடிக்கப்பட்டிருக்கிறார். கோயில் முகப்பில் மிகப்பெரிய தேவநந்தி உள்ளது. தைப்பூச விழாவின்போது, அறுபத்துமூன்று நாயன்மார் உலா நடக்கும்.
இருப்பிடம்:
கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 10 கி.மீ.,.
திறக்கும் நேரம்:
காலை 5.30- 12, மாலை 4.30- 9.
போன்:
0435- 2460 660.