/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
இன்டர்வியூ என்றால் உதறலா! ஓசைநாயகியை வணங்குங்க!
/
இன்டர்வியூ என்றால் உதறலா! ஓசைநாயகியை வணங்குங்க!
ADDED : ஆக 20, 2012 09:29 AM

படிப்பு நன்றாக வருகிறது, தேர்வுகளில் நல்ல மார்க், ஆனால், பேச்சுத்திறன் குறைவால் இன்டர்வியூ போனால் உதறுகிறது. அப்படியானால் நீங்கள் சீர்காழி திருக்கோலக்கா திருத்தாளமுடையார் கோயிலுக்கு குடும்பப் பெரியவர்களுடன் சென்று வாருங்கள். திக்குவாயுள்ள குழந்தைகளும் இங்கு சென்று இங்குள்ள ஓசை கொடுத்த நாயகியைத் தரிசித்து தேன் பிரசாதம் பெற்று வரலாம்.
தல வரலாறு:
பார்வதிதேவியால் ஞானப்பால் கொடுக்கப்பட்ட திருஞான சம்பந்தர், பல தலங்களுக்கு சென்று, தனது சிறு கைகளால் தாளம் போட்டு பாடுவதைப்பார்த்தார் சிவன். குழந்தையின் கைகள் வலிப்பது பொறாமல், அவருக்கு தங்கத்தால் ஆன இரண்டு தாளங்களை கொடுத்தார். தட்டிப்பார்த்தார் சம்பந்தர். ஓசை வரவில்லை. உடனே அந்த தாளத்திற்கு ஓசை கொடுத்தாள் அம்மன். எனவே தான் இங்குள்ள மூலவர் தாளபுரீஸ்வரர் அல்லது சப்தபுரீஸ்வரர் எனவும், அம்மன் ஓசைகொடுத்த நாயகி எனவும் அழைக்கப் படுகிறார்கள்.
தல பெருமை:
இசையில் விருப்பமுள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டு சென்றால் அதில் வல்லவராகலாம். கோயிலின் நுழைவு வாயிலிலேயே ஞானசம்பந்தருக்கு தாளம் கொடுக்கும் ஈசனும், ஓசை கொடுக்கும் நாயகியும் அருள்பாலிக்கிறார்கள். இந்திரனும் சூரியனும் இத்தலம் வந்து பூஜை செய்து பலனடைந்துள்ளனர்.இங்குள்ள மகா லட்சுமி மிகவும் சக்தி வாய்ந்தவள். எல்லா செல்வங்களும் அருளக்கூடியவள். திருமகள் தவம் செய்து திருமாலுடன் இணைந்ததலம் என்பதால் இத்தலம் திருக்கோலக்கா எனப்பட்டது. இவ்வூரில் தான், சம்பந்தருக்கு அம்பாள் ஞானப்பால் புகட்டிய புகழ்மிக்க தோணியப்பர் (சட்டைநாதர்) கோயில் உள்ளது.
பேச்சுத்திறன் பிரார்த்தனை:
ஓசை கொடுத்த நாயகியை வணங்குவோர் சொற்பொழிவு செய்யும் அளவுக்கு திறமை மிக்கவராகி, மாபெரும் புகழை அடைவார்கள். ""ஜடப்பொருளான தாளத்திற்கு ஓசை கொடுத்த நாயகியே, எனக்கு பேசும் வல்லமையைக்கொடு,''என வேண்டி, அம்மன் பாதத்தில் தேன் வைத்து அர்ச்சனை செய்து அதை பிரசாதமாகப் பெற்றுச் சென்று சாப்பிட்டு வர வேண்டும்.
சிறப்பம்சம்:
கோயில் எதிரில் ஆனந்ததீர்த்தம் உள்ளது. பிரகாரத்தில் விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, சனிபகவான், பைரவர், சூரியன் சந்நிதிகள் உள்ளன. நடராஜ சபை உள்ளது. அம்பாள் சந்நிதி தனியாக உள்ளது. ஞானசம்பந்தர் பொன்தாளம் ஏந்தி நிற்கும் உற்சவத் திருமேனியும் குறிப்பிடத்தக்கது. மகாலட்சுமி தவம் இருந்து மகாவிஷ்ணுவை திருமணம் செய்த தலம் என்பதால், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் இங்குள்ள மகாலட்சுமிக்கு, மஞ்சள் பொடியால் அர்ச்சனை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
இருப்பிடம்:
சீர்காழி பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ.
போன் :
04364 274175.