/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
நம் எல்லோருக்கும் பிள்ளை இறைவன் - நவ.21 அண்ணாமலையார் தீபம்
/
நம் எல்லோருக்கும் பிள்ளை இறைவன் - நவ.21 அண்ணாமலையார் தீபம்
நம் எல்லோருக்கும் பிள்ளை இறைவன் - நவ.21 அண்ணாமலையார் தீபம்
நம் எல்லோருக்கும் பிள்ளை இறைவன் - நவ.21 அண்ணாமலையார் தீபம்
ADDED : நவ 19, 2010 03:17 PM

திருவண்ணாமலை நகரை ஆண்டு வந்தவன் வல்லாள மகராஜன். அவனுக்கு வல்லமாதேவி, சல்லமாதேவி என்ற இரண்டு மனைவிகள் இருந்தனர். ஆனால், ராஜாவுக்கு குழந்தைகள் இல்லை. தனக்குப் பின் நாடாள வாரிசு இல்லையே என்று அவன் மிகவும் வருத்தப்பட்டான். முதியவர்களிடம் ஆலோசனை கேட்டான்.''அரசே! தானதர்மங்களை யாரொருவன் தவறாமல் செய்கிறானோ, அவனுக்கு குழந்தை பாக்கியம் நிச்சயம்,'' என்றனர். அவனும், சகல வகை தர்மங்களும் செய்யப்படும் என முரசறைந்து அறிவித்தான். இதைக் கேட்ட ஏழைகள், மன்னனிடம் தானம் பெற்றனர்.வல்லாளனைப் பற்றி கேள்விப்பட்டநாரதர், அண்ணாமலைக்கு வருகை தந்தார்.வல்லாள ராஜன் நாரதரை வரவேற்றான். குழந்தை பாக்கியத்திற்காக நடக்கும் தர்மம் பற்றி கேட்டறிந்தார். சிவலோகத்துக்கு சென்று, வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து தருவதாகக் கூறிச்சென்றார்.அதன்படி, சிவலோகம் சென்று சிவபெருமானிடம் வல்லாளனின் பெருமையைச் சொன்னார்.
அவரும் ஆவன செய்வதாக வாக்களித்தார். ஆனால், இறைவன் எதையும் அவ்வளவு எளிதில் தந்து விடமாட்டான். அதன்படி மன்னனின் தன்மானத்துக்கே இழுக்கு வரும்படியாக ஒரு லீலையை நடத்தினார். ஒருநாள், குபேரனையும் அழைத்துக்கொண்டு சிவனடியார் வேடத்தில் பூலோகம் வந்தார். சில அடியார்களைத் தன் சக்தியால் உருவாக்கினார். அனைவரையும் அண்ணாமலையில் குடியிருந்த தாசிகளின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவர்களுக்கு குபேரன் பொன் கொடுத்தான். அங்கேயே இருக்கும்படி சொல்லிவிட்டு வல்லாளனின் அரண்மனைக்குச் சென்றார். வல்லாளன் அவரை வரவேற்று ஏதேனும் தர்மம் பெற வந்திருப்பார் என நினைத்து என்ன வேண்டுமென கேட்டான். ''தனக்கு ஒரு பெண் வேண்டும்,'' என்றார் அடியார். ''அதற்கென்ன! என் நாட்டுப் பெண்ணை தாராளமாய் மணம் முடித்து வைக்கிறேன்,'' என்றான் மன்னன்.
''அரசே! எனக்கு மனைவி வேண்டாம், இன்று மட்டும் என்னுடன் தங்க ஒரு பெண்
வேண்டும்,'' என்றார் அடியார். மன்னனுக்கு ஒன்றும் புரியவில்லை. ''இப்படியும் ஒரு தானமா?'' என நினைத்தவன் தாசியர் தெருவுக்கு ஆள் அனுப்பினான். அங்கோ, சிவன் விட்டு வந்த அடியார்களுடன் அவர்கள் தங்கியிருந்ததால், யாரும் வர மறுத்து விட்டனர். அமைச்சர்களை அனுப்பினான். அப்போதும் பயனில்லை. இவனே நேரில் போய் பார்த்தான்.
''அரசே! ஒருவரிடம் பொருள் பெற்ற பிறகு அவருடன் தங்காமல் வருவது அழகோ?'' என அவர்கள் கேட்ட கேள்வி நியாயமாகவே இருக்கவே, மன்னன் திரும்பி விட்டான். அவனது இக்கட்டான நிலையை அறிந்த அவனது இரண்டாம் மனைவி சல்லமாதேவி, அந்த பாதகச்
செயலுக்கு தான் உடன்படுவதாகக் கூறினாள். மன்னனும் வேறு வழியின்றி அவரை அனுப்ப அவர்கள் தனியறைக்குள் சென்றனர். உடனே அடியவராக வந்த சிவன், குழந்தையாக மாறி அந்தப் பெண்ணின் மடியில் தவழ்ந்தார். அவள் மகிழ்ந்தாள். அறையைத் திறந்து ஓடிவந்து குழந்தையை அரசனிடம் காட்டினாள். ரிஷப வாகனத்தில் அண்ணாமலையாரும், உண்ணாமலையாளும் அவனுக்கு காட்சியளித்தனர். ''மன்னா! தர்மநெறியில் உனக்குள்ள மனதிடத்தை அறியவே இவ்வாறு நாடகம் நடத்தினேன். நான் உனக்கு பிள்ளையாக வந்ததால், உன் இறுதிச்சடங்கை நானே செய்வேன், உன் தேசம் இனி எனக்குச்சொந்தம். நானே இப்பூமியை ஆள்வேன்,'' என்றார். இப்போதும், வல்லாளனின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி திருவண்ணாமலையில், அவன் மறைந்த நாளான மாசி மகத்தன்று நிகழ்த்தப்படுகிறது. அவனுக்கு இறுதிச்சடங்கு செய்ய, எவ்வித மேள வாத்தியமும் இல்லாமல், அண்ணாமலையார் எழுந்தருளுகிறார். எல்லோருக்கும் தந்தை இறைவன் என்று தானே சொல்வோம். ஆனால், அவனிடம் நிஜமான பக்தி செலுத்தினால், அவனே நம் எல்லோருக்கும் பிள்ளையாகப் பிறப்பான்.