/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
கைக்கு கை மாறும் பணம் அதைக் கைப்பற்ற நினைக்குது மனம்
/
கைக்கு கை மாறும் பணம் அதைக் கைப்பற்ற நினைக்குது மனம்
கைக்கு கை மாறும் பணம் அதைக் கைப்பற்ற நினைக்குது மனம்
கைக்கு கை மாறும் பணம் அதைக் கைப்பற்ற நினைக்குது மனம்
ADDED : மார் 08, 2016 11:45 AM

* பணம் தேவையற்றது என்று யாராலும் சொல்ல முடியாது. ஆனால் கைக்கு கை மாறும் அதை கைப்பற்றுவது ஒன்றே வாழ்க்கை என்று நினைப்பதும் கூடாது. பணமே வாழ்க்கை என்று கருதுபவர்கள் நெருப்பை வீடு முழுவதும் மூட்டி, தனக்குத் தானே அழிவைத் தேடிக் கொள்கிறார்கள்.
* தன்னம்பிக்கை கொண்ட மனம் ஒளிவிளக்கு போல பிரகாசிக்கும். விளக்கின் மூலம் இருள் நீங்குவது போல, தன்னம்பிக்கை படைத்தவர்களின் எதிர்காலமும் ஒளிமயமானதாக விளங்கும்.
* ஆன்மிகவாதிகளுக்கு மட்டுமே மன ஒருமைப்பாடு தேவை என்றும், மற்றவர்கள் இஷ்டம் போல வாழ்வு நடத்தலாம் என்றும் மக்கள் தவறாக எண்ணுகிறார்கள். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் மன ஒருமைப்பாடு அவசியம். இந்த உண்மையை உணர்ந்து மனதை கட்டுக்குள் வையுங்கள்.
* மனம் அலைபாயும் தன்மை கொண்டது. அதைக் கட்டுக்குள் வைப்பது என்பது காற்றைக் கையில் பிடிப்பதற்குச் சமம். ஒழுக்கநெறி தவறாதவர்களாலும், விடாமுயற்சியுடன் செயல்படுபவர்களாலும் மட்டுமே மனதை எளிதாக கட்டுப்படுத்த முடியும்.
* பெற்றோரைக் கடவுளாக மதித்து வணங்க வேண்டும். பெண்களைத் தாயாகப் போற்றி மதிக்க வேண்டும். இளைஞர்களுக்கு மட்டுமில்லாமல் இளம்பெண்களுக்கும் இந்த அறிவுரை பொருந்தும். இளம்பெண்கள் தாய்மை உணர்வோடு மற்றவர்களுடன் பழக வேண்டும்.
* உண்ணும் உணவு மிதமானதாகவும், நல்ல உணர்வைத் தூண்டும் விதத்தில் இருக்க வேண்டும். தினமும் முன் இரவில் உறங்கவும், அதிகாலையில் விழித்தெழவும் வேண்டும். இதுவே நல்ல உடல்நிலைக்கும், வாழ்வின் முன்னேற்றத்திற்கும் உதவும்.
* எண்ணம், சொல், செயல் மூன்றும் உயர்ந்த சிந்தனைகளைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். ஆன்மிக சிந்தனையாளர்களின் வாழ்க்கை வரலாறு, நூல்களை அடிக்கடி படிப்பது அவசியம்.
* ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஏகபத்தினி விரதத்தை ஆண்களும் வாழ்வில் கடைபிடிக்க வேண்டும். பெண்களும் பதிவிரதையாக தன் கணவருக்கு உண்மையானவளாக இருப்பது அவசியம்.
* தினமும் இளைஞர்கள் ஒரு மணி நேரம் உடற்பயிற்சியில் ஈடுபடுவது அவசியம். அது யோகாசனம், ஜிம்பயிற்சி, நடைபயிற்சி, உடல் உழைப்பிற்குரிய பணி என விருப்பம் போல எதுவாகவும் இருக்கலாம்.
* வாழ்வில் பிரச்னை என்பது தவிர்க்க முடியாத ஒன்று. பிரச்னைக்கு தீர்வு காணாமல் மவுனம் சாதிப்பதும், அதை சகித்துக் கொண்டும் வாழ வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை. உண்மையில் பிரச்னைகள் தான் மனிதர்களின் முன்னேற்றத்திற்கு தூண்டுகோலாக அமைகிறது.
* கடவுள் ஒருவரே. அனைவருக்கும் தாயும் தந்தையுமாக அவர் இருக்கிறார். நாம் அனைவரும் உடன்பிறந்த சகோதரர்கள் என்பதை உண்மையை உணர்ந்து ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி வாழ வேண்டும்.
* எரியும் தீபத்தால் மட்டுமே மற்றொரு தீபத்தை ஏற்ற முடியும். சிறியவர்களான இளைஞர்களுக்கு வழிகாட்ட விரும்பும் பெரியவர்கள் நல்ல எண்ணம், பண்பாடு, ஒழுக்கம் ஆகிய உயர்ந்த பண்புகளைக் கடைபிடிப்பவர்களாக இருக்க வேண்டும்.
* புலி, சிங்கம் போன்ற கொடிய விலங்குகளைக் கண்டால் பயந்து விலகுவது போல தீயகுணம் படைத்த கொடியவர்களிடம் இருந்து விலகியே இருக்க வேண்டும். அவர்களைக் கண்டிக்க முயன்றால் பல பிரச்னைளை வாழ்வில் சந்திக்க நேரிடும்.
மனதை மாற்றச் சொல்கிறார் புருஷோத்தமானந்தர்

