/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
கையால் தொடக்கூடாத லிங்கம் குச்சியால் ஆடை மாற்றும் அதிசயம்
/
கையால் தொடக்கூடாத லிங்கம் குச்சியால் ஆடை மாற்றும் அதிசயம்
கையால் தொடக்கூடாத லிங்கம் குச்சியால் ஆடை மாற்றும் அதிசயம்
கையால் தொடக்கூடாத லிங்கம் குச்சியால் ஆடை மாற்றும் அதிசயம்
ADDED : நவ 25, 2016 09:29 AM

டிச.2 ரம்பா திரிதியை
காஞ்சிபுரம் மாவட்டம் எலுமியங்கோட்டூரில் தெய்வநாயகேஸ்வரர் என்னும் பெயரில் சிவன் அருள்பாலிக்கிறார்.
தேவமங்கையான ரம்பை இவரை வழிபட்டு அருள் பெற்றாள். இந்த லிங்கத்தை அர்ச்சகர்கள் தொடுவதில்லை ஒரு குச்சியால் ஆடை, மாலைகளை அணிவிப்பது வித்தியாசமானது.
தல வரலாறு: தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய மூன்று அசுரர்களும் பறக்கும் கோட்டைகளை அமைத்தனர். அவற்றில் பறந்து சென்று தேவர்கள் வசிக்கும் இடங்களில் இறக்கி விடுவார்கள். இதன் அடியில் சிக்கும் தேவர்கள் அளவில்லாத கஷ்டமடைந்தார்கள். இவர்களை சம்ஹாரம் செய்ய சிவனும், பல தேவர்களும் புறப்பட்டனர். ஆனால் அவர்கள் விநாயகரை வழிபட மறந்து விட்டனர். எந்த செயலைத் தொடங்குவதாக இருந்தாலும் விநாயகரை வழிபட்டு துவங்குவது மரபு. அவ்வாறு செய்யாததால் விநாயகர், தன் தந்தை புறப்பட்ட தேரின் அச்சை முறித்தார்.
மரமல்லிகை வனமாக இருந்த இத்தலத்தின் வழியாகச் சென்ற சிவனது தேர் நிலை குலைந்தது. அது கீழே விழாமல் மகாவிஷ்ணு தாங்கிப் பிடித்தார். அப்போது, சிவன் தடுமாறவே கழுத்தில் இருந்த கொன்றை மாலை இத்தலத்தில் விழுந்தது. மாலை விழுந்த இடத்தில் சுவாமி லிங்கமாக எழுந்தருளினார். இங்கு பிற்காலத்தில் கோவில் எழுப்பப்பட்டது. தேவர்களின் படைக்கு தலைமையேற்று சென்றதால் சுவாமிக்கு 'தெய்வ நாயகேஸ்வரர்' என பெயர் ஏற்பட்டது. இந்த லிங்கம் மிகவும் புனிதமானது என்பதால், இதை பூஜையின் போது கூட அர்ச்சகர்கள் தொடுவதில்லை. ஒரு குச்சியின் உதவியுடன் சுவாமிக்கு ஆடை, மாலைகள் அணிவிக்கப்படும்.
ரம்பா பூஜித்த சிவன்: தேவகன்னியரான ரம்பா, ஊர்வசி, மேனகா மூவரும் பேரழகுடன் திகழ்ந்தனர். அழகு அழியக்கூடியது. ஆனால் எந்நாளும் அழியாத அழகு பெற தேவகுருவான பிரகஸ்பதியிடம் ஆலோசனை கேட்டனர். அவர் பூலோகத்திலுள்ள தெய்வநாயகேஸ்வரரை வழிபடும்படி கூறினார். அதன்படி, இங்கு வந்த ரம்பா சிவனுக்காக தீர்த்தம் ஒன்றை உருவாக்கினாள். அதில் மூவரும் நீராடி மல்லிகை, ரோஜா மலர்களால் சிவனை அர்ச்சனை செய்து வழிபட்டனர். பதினாறு பட்டை கொண்ட சிவலிங்கம் ஒன்றையும் இங்கு பிரதிஷ்டை செய்தனர். இதன் பயனாக, பேரழகும், புதுப்பொலிவும் பெற்று மகிழ்ந்தனர்.
தேவகன்னியரான ரம்பையர்களுக்கு அருள் செய்ததால் சிவனுக்கு 'ரம்பேஸ்வரர்' என்றும், தலத்திற்கு ரம்பையங்கோட்டூர் என்றும் பெயர் உண்டானது. தற்போது 'எலுமியங்கோட்டூர்' என மருவி விட்டது. அம்பிகை கனக குஜாம்பிகை என்னும் திருநாமத்துடன் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறாள். ரம்பா உருவாக்கிய தீர்த்தம் மல்லிகா புஷ்கரணி எனப்படுகிறது. தட்சனின் சாபம் நீங்க சந்திரன் இத்தீர்த்தத்தில் நீராடி பலன் பெற்றார்.
யோக தட்சிணாமூர்த்தி: ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகிய மூவரும் இங்கு வழிபட்ட போது சிவன் யோக தட்சிணாமூர்த்தியாக காட்சியளித்தார். “நீங்கள் மூவரும் என்றென்றும் இளமையும், பொலிவும் பெற்று விளங்குக” என அருள்புரிந்தார். இவர் கோஷ்டத்தில் சின்முத்திரை காட்டியபடி வலக்கையை மார்பில் வைத்த நிலையில் இருக்கிறார். யோக பட்டை கொண்ட இவரது வலது பாதம் மடங்கிய நிலையில் உள்ளது. அபூர்வ கோலத்தில் காட்சி தரும் இவரை வழிபட்டால் வசீகரிக்கும் முகப்பொலிவு உண்டாகும். குருதோஷம் நீங்க அபிஷேகம், அர்ச்சனை செய்து பக்தர்கள் வழிபடுகின்றனர். கோவிலின் நுழைவு வாசல் அருகே 16 பட்டையுடன் கூடிய ரம்பாபுரிநாதர் மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.
பாடச் சொன்ன சிவன்: சிவத்தலங்களை தரிசித்த ஞான சம்பந்தர் இத்தலத்தின் வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது, முதியவர் வடிவில் தோன்றி, 'இப்பகுதியில் சிவன் கோவில் கொண்டிருக்கிறார். அவரைக் குறித்தும் பதிகம் பாடுக' என்று சொல்லி மறைந்தார். அங்குமிங்கும் அலைந்த சம்பந்தருக்கு கோவில் தென்படவில்லை. அதன் பின் பசுவாக மாறி அவரை வழி மறித்த சிவன், தான் இருக்கும் இடத்தை சுட்டிக் காட்ட, சம்பந்தர் பதிகம் பாடினார். தினமும் கோபூஜை நடக்கும் இத்தலத்தில் ஆண்டுதோறும் ஏப். 2 7 மற்றும் செப். 5 11 வரையிலும் மூலவர் மீது சூரிய ஒளி படர்வது சிறப்பு. பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 246வது தலமாக விளங்குகிறது.
இருப்பிடம்: காஞ்சிபுரத்திலிருந்து 25 கி.மீ., சென்னையிலிருந்து 60 கி.மீ.,
சென்னை அரக்கோணம் சாலையிலுள்ள கூவம் கிராமத்தில் இருந்து 6 கி.மீ., எலுமியங்கோட்டூர்.
நேரம்: காலை 6:00 - இரவு 8;00 மணி
அலை/தொலைபேசி: 94448 65714, 044 - 2769 2412

