/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
ஒரே நிமிடம் தான் கோரிக்கை நிறைவேறி விடும்!
/
ஒரே நிமிடம் தான் கோரிக்கை நிறைவேறி விடும்!
ADDED : மே 01, 2016 11:17 AM

பக்தர்களின் கோரிக்கையை கணப்பொழுதிற்குள் நிறைவேற்றும் நிமிஷாம்பாள், கர்நாடக மாநிலம் கஞ்சாம் என்னும் திருத்தலத்தில் அருள்புரிகிறாள்.
தல வரலாறு: முக்த ராஜன் என்னும் அம்பாள் பக்தன் இப்பகுதியை ஆட்சி செய்தான். ஜானு சுமண்டலன் என்னும் அசுரன் முக்தராஜனைத் துன்புறுத்தினான். அவனை அரசனால் அடக்க முடியவில்லை. தன் இஷ்ட தெய்வமான பராசக்தியை நோக்கி தவத்தில் ஆழ்ந்தான்.
பராசக்தியும் மன்னனின் கோரிக்கையை ஏற்று, அசுரனை அழிக்கப் புறப்பட்டாள். அசுரனின் முன் நின்று கண்களை இமைத்தாள். நிமிஷ நேரத்தில் அசுரன் சாம்பலானான். தனக்கு அருள் செய்த அம்பிகைக்கு கோவில் எழுப்பினான் மன்னன். 'நிமிஷாம்பாள்' என்னும் பெயரிட்டான். 'கண நேரத்தில் வரம் அளிப்பவள்' என்பது இதன் பொருள்.
நிமிஷாம்பாள் ஜெயந்தி: லலிதா சகஸ்ர நாமத்தில் 281வது நாமாவளியாக 'ஒன்னுமேஷ நிமிஷோத்பன்ன விபன்ன புவனாவல்லே நம:' என்று அம்பாள் போற்றப்படுகிறாள். அம்பாள் நிமிஷ நேரத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றுபவள் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. வைகாசி வளர்பிறை தசமியன்று நிமிஷாம்பாள் ஜெயந்தி (மே16) நடக்கிறது. அன்று 108 கலசாபிஷேகம், துர்கா ஹோமம் நடக்கும். 'கிருஷ்ண சிலா' என்னும் கருமை நிற சிலையாக இருக்கும் அம்பாளின் கைகளில் சூலம், உடுக்கை உள்ளது. தலை மீதுள்ள குடை தர்மச் சக்கரமாக கருதப்படுகிறது. மன்னர் மும்முடி கிருஷ்ணராஜ உடையார் காலத்தில் சக்கரப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தினமும் மூன்று கால பூஜை நடக்கிறது.
ஐந்து சந்நிதிகள்: விநாயகர், சிவன், பார்வதி, சூரியன், விஷ்ணு ஆகிய ஐந்து தெய்வங்களையும் இணைத்து சனாதன தர்மத்தை ஆதிசங்கரர் ஏற்படுத்தினார். அதைப் பிரதிபலிக்கும் விதமாக இங்கு ஐந்து சன்னிதிகள் உள்ளன. சூரியன், அனுமன் சன்னிதிகள் மேற்கு நோக்கி உள்ளன.
அர்ச்சகர்கள் அமர்ந்தே பூஜை செய்கின்றனர். கோவில் முன்பு காவிரி நதி ஓடுகிறது.
திறக்கும் நேரம்: காலை 6.00 - இரவு8.30 மணி.
இருப்பிடம்: மைசூருவில் இருந்து 18 கி.மீ.,
தொலைபேசி: 08236 252 640, 098458 01632

