ADDED : பிப் 20, 2023 11:08 AM

பஞ்சாப் மாநிலம் சண்டிகருக்கு அருகிலுள்ள ஜெயந்திமாஜ்ரி பகுதியிலுள்ள குன்றின் மீதுள்ள அம்மன் ஜெயந்திதேவி. 500 ஆண்டுக்கு முன்பு இமாச்சல் பிரதேசத்தில் இருந்து இளவரசி ஒருத்திக்காக அம்மன் இங்கு கோயில் கொண்டாள். இவளை வழிபட்டால் வாழ்வு சிறக்கும்.
அம்பிகை அருளால் ஆயுதங்களைப் பெற்ற பாண்டவர்கள் போரில் வெற்றி பெற்றனர். இதற்கு நன்றியாக இமாச்சல் பிரதேசத்தில் ஜெயந்திதேவிக்கு கோயில் கட்டினர். காங்கிரா பகுதி மக்களின் குலதெய்வமான இவள் சண்டிகருக்கு வந்த கதை சுவாரஸ்யமானது.
காங்கிரா இளவரசிக்கும், சண்டிகருக்கு அருகிலுள்ள ஹாத்நாயூர் பகுதியை ஆண்ட மன்னருக்கும் திருமணம் நடந்தது. ஜெயந்தி தேவியின் பக்தையான இளவரசி, மணமான பின்னர் அம்மனை தரிசிக்க முடியாதே என்ற கவலையுடன் மணமகனுடன் பல்லக்கில் புறப்பட்டாள். வழியில் பல்லக்கின் பாரம் அதிகரிக்கவே பணியாளர்கள் கீழே வைத்தனர்.
''ஜெயந்தி தேவியை என்னுடன் வரும்படி பிரார்த்தனை செய்தேன். அம்மன் திருவிளையாடலால் தான் பல்லக்கு கனக்கிறது'' என்றாள் இளவரசி. உடனடியாக பூஜாரியை அழைத்து வர, கல் ஒன்றில் அம்மனை ஆவாஹனம் செய்து அதை ஒரு பல்லக்கில் ஏற்றினார்.
பின்னர் ஜெயந்திமாஜ்ரி குன்றின் மீது கோயில் கட்டப்பட்டது. பூஜாரியின் 11வது தலைமுறையினர் அர்ச்சகர்களாக தற்போது பணிபுரிகின்றனர். இளவரசியின் வம்சாவளியினர் இன்றும் வழிபடுகின்றனர். 100 படிகளில் ஏறினால் கோயிலை அடையலாம். வழியில் தீர்த்தக் குளம் உள்ளது. பளபளப்பான ஆடை, பூக்களுடன் பளிங்குக்கல் சிலையாக அம்மன் காட்சி தருகிறாள். சிவன், கணேஷ், லட்சுமி, லோக்தா தேவி, பால சுந்தரி சன்னதிகள் உள்ளன. மாசி பவுர்ணமியன்று மெகா மேளா நடக்கிறது. நவராத்திரி விழாவும் இங்கு பிரசித்தம். கோயிலை ஒட்டியுள்ள பூங்கா, அருங்காட்சியகம் பக்தர்களை கவரும் விதத்தில் உள்ளது.
எப்படி செல்வது : சண்டிகரில் இருந்து 15 கி.மீ.,
விசேஷ நாள்: ஆவணி, மாசி பவுர்ணமி, நவராத்திரி
நேரம்: காலை 6:00 - இரவு 7:00 மணி
தொடர்புக்கு: 91 - 96532 31469
அருகிலுள்ள தலம்: சண்டிகர் 31வது செக்டாரில் கார்த்திகேய சுவாமி கோயில் 15 கி.மீ.,
நேரம்: காலை 6:00 - 11:30 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 91- 0172- 261 1191

