/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
வெளிநாடு செல்லும் யோகம் வந்தாச்சு
/
வெளிநாடு செல்லும் யோகம் வந்தாச்சு
ADDED : செப் 22, 2023 10:11 AM

வெளிநாட்டில் படிக்க, வேலை பார்க்க வேண்டும். ஏன்... சுற்றிப் பார்க்கவும் ஆசையிருக்கும். இது போல ஆசை உங்களுக்கும் உள்ளதா... அப்படி இருந்தால் அதை நிறைவேற்றித்தர தயாராக இருக்கிறார் திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர்.
பல ஆண்டுக்கு முன் பயணி ஒருவர் சாக்கு மூடையுடன் திருச்சி ரயில் நிலையத்தில் இறங்கினார். மூடை எடை அதிகம் உள்ளதால் அபராதம் (லக்கேஜ் சார்ஜ்) கட்டும்படி கூறினார் பரிசோதகர். பணம் இல்லாததால், மூடையை வைத்துக் கொள்ளுங்கள். பணத்துடன் வருகிறேன் என கூறிச் சென்றார். அவர் வரவில்லை. மூடை அசைவது போல் தெரிந்ததால் அங்கிருந்த சிலர் பிரித்துப் பார்த்தனர். அதில் ஆஞ்சநேயர் சிலை ஒன்று இருந்தது. ஆச்சர்யப்பட்டவர்கள் இரண்டாவது நடைமேடையிலேயே அதை வைத்து வழிபட்டனர்.
பின் 1928ல் ரயில் நிலையத்தை விரிவுபடுத்த பணிகள் தொடங்கின. அப்போது பொது மேலாளரான வெள்ளைக்காரர் ஆர்ம்ஸ்பியின் உத்தரவின்படி கோயில் இடிக்கப்பட்டது. ஆனால் சிலையை அகற்ற முடியவில்லை. அன்றிரவு அவரது கனவில், ஆஞ்சநேயர் சிலை உள்ள இடத்திற்கு அருகில் இரண்டு ரயில் இன்ஜின்கள் தடம் புரள்வது போல தெரிந்தது. மறுநாள் அந்தக் கனவு பலிக்கவே அதிர்ச்சியடைந்தார். விபத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை. தன் தவறை உணர்ந்து கோயில் கட்ட ஏற்பாடு செய்தார். இங்கு ஓரடி உயர ஆஞ்சநேயர் கிழக்கு நோக்கி இருக்கிறார். இடது பாதம் வடக்கு நோக்கியும், வலது பாதம் கிழக்கு நோக்கியும் உள்ளது. இடது கையில் பாரிஜாத மலர் ஏந்தியும், வலது கை ஆசியளிக்கும் நிலையிலும் உள்ளது.
பாஸ்போர்ட், விசா கிடைப்பதில் சிக்கல் உள்ளவர்கள் இவரை தரிசித்தால் யோகம் உண்டாகும்.
எப்படி செல்வது: திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ.,
விசேஷ நாள்: புரட்டாசி சனிக்கிழமை அனுமன் ஜெயந்தி
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 0431 - 231 5073
அருகிலுள்ள தலம்: திருச்சி உத்தமர் கோயில் 13 கி.மீ., (நினைத்தது நிறைவேறும்)
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:30 - 8:00 மணி
தொடர்புக்கு: 0431 - 259 1466, 259 1040