
பழநி பால தண்டாயுதபாணி கோயில் -நெல்லி மரம்
நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களையும், மலை, கடல், ஆறு என அனைத்தையும் தெய்வமாக கருதினர். மரங்களை தலவிருட்சமாக அடையாளம் காட்டி, இயற்கையை பாதுகாக்கும் பணியை செய்தனர். அந்த வகையில் மலை, தலவிருட்சம் என இரண்டாலும் சிறப்பு மிக்க தலம் பழநி.
கைலாயத்தில் சிவகிரி, சக்திகிரி என்ற மலைச் சிகரங்கள் இருந்தன. அவற்றை பெயர்த்து பொதிகையில் தங்கியுள்ள அகத்தியரிடம் வழங்குமாறு இடும்பாசுரனிடம் கட்டளையிட்டார் சிவபெருமான். காவடியைப் போல தன் தோளில் அவற்றைச் சுமந்து வந்த அசுரன் வரும் வழியில் களைப்படைந்தான். பழநியை அடைந்ததும் அவற்றை இறக்கி வைத்த போது முருகப் பெருமானால் தடுத்தாட் கொள்ளப் பட்டான். அந்த சிகரங்களே பழநி, இடும்பன் மலையாக உள்ளன.
பொதினி, வையாவி, ஆவினாடு, ஆவினன்குடி, திருஆவினன்குடி என இத்தலத்திற்கு பல பெயர்கள் உண்டு. சித்தர்களில் ஒருவரான போகர் உருவாக்கியதே இங்குள்ள தண்டாயுதபாணி கோயில். சித்தர்கள் பலர் இங்கு வாழ்ந்ததால் 'சித்தன் வாழ்வு' என்றும் பெயருண்டு. சித்தர்களான போகர், அவரது சீடர் புலிப்பாணியின் பீடங்கள் இங்குள்ளன. பழநி தண்டாயுதபாணியின் திருவுருவம் ஒன்பது வகையான சித்தமருந்துகளால் ஆனது. இதன் மீது பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக தருவர். வாழைப்பழம், பேரிச்சம்பழம், கருப்பட்டி, கல்கண்டு, தேன் என்னும் ஐந்து அமிர்தங்களால் ஆனது பஞ்சாமிர்தம்.
ஒருமுறை பூமியில் பிரளயம் ஏற்பட படைப்புக் கடவுளான பிரம்மா அதிர்ச்சியானார். அப்போது அவரது வாயில் ஊறிய உமிழ்நீர் நெல்லிமரமாக மாறியது என்றும், ஒருமுறை தவத்தில் ஆழ்ந்த பிரம்மா சிந்திய ஆனந்தக் கண்ணீரில் இருந்து நெல்லி மரம் தோன்றியது என்றும் கூறுவர்.
பரணி நட்சத்திரத்திற்கு உரிய மூலிகை பெருநெல்லி மரம். இதன் தாவரவியல் பெயர் பில்லாந்தஸ் எம்ப்லிக்ஸ். கொத்துக் கொத்தாக பூத்துக் காய்க்கக் கூடிய இந்த மரங்கள் பில்லாந்தேசியே குடும்பத்தைச் சார்ந்ததாகும்.
போகர் பாடிய பாடல்
நெல்லிக்காய் பெயர்தனையே நிகழ்த்தக்கேளு
நேயமாம் ரசபலமாம் சீதுபலமாகுந்
தல்லிதாத் திரிபலமாஞ் சிவமுமாகும்
சமமான ஆமலகி திருஷியபலமாகும்
ரசபலம், சீதுபலம், தாத்திரிபலம், சிவம், ஆமலகி, திருஷ்ய பலம், சிரிபலம், வசம், பஞ்சாட்சர வருஷி, திரிதோஷ சமனி என நெல்லி மரத்திற்கு பல பெயர்கள் உண்டு.
அகத்தியர் பாடிய பாடல்
பித்தமன லையம் பீநசம்வாய் நீர் வாந்தி
மத்தமலக் காடும் மயக்கமுமில் - ஒத்தவுரு
வில்லிக்கா யம்மருங்கா மென்னாட்கா
லந்தேர்ந்தே
நெல்லிகா யம்மருந் துணீ.
நெல்லிக்காயைப் பகலில் சாப்பிட்டால் கபம், மூக்கடைப்பு, வாய்நீர்ச் சுரப்பு, வாந்தி, மயக்கம், தலைச்சுற்று, மலச்சிக்கல், சர்க்கரை நோய் குணமாகும். இளமை, அழகு அதிகரிக்கும். நெல்லிமர வேர் ஊறிய நீரைப் பருகினால் வாந்தி, சுவையின்மை, மலக்கட்டு,
அஜீரணம் நீங்கும்.
சித்தர் தேரையர் பாடிய பாடல்
இல்லா மலக மிரண்டு மயின்றானே
யில்லா மலகமிருக்குமே - இல்லாமல்
வாழைக் கனியும் வடையு மிழுது
முண்பான்
வாழைக் கனியுன் வைத்த வன்.
நெல்லிமர வேர், விதை, பட்டை, ஈர்க்கு, காய், பழம், வற்றல் ஆகியவற்றை ஊறுகாய், துவையலாக செய்து சாப்பிட்டு வர வயிறு வீக்கம், ரத்தசோகை, மூலம், ரத்தப்போக்கு, மகோதரம், சூலை, மேகநோய், உஷ்ணம், பாண்டுரோகம் ஆகியன நீங்கும்.
நெல்லிவற்றல் சுவை மிக்கது. இதைச் சாப்பிட்டால் உடல்சூடு தணியும். எண்ணெய் காய்ச்சி முழுகினால் பைத்தியம், கண் எரிச்சல் மறையும். நெல்லிக்காய் ஊறுகாய் செரிமானத்தை அதிகரிக்கச் செய்யும். லேகியம், ஆமலாதி தைலம், பஞ்ச கற்ப சூரணம், திரிபலா சூரணம் போன்றவையும் நெல்லிக்காயில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.
நவபாஷாணம் என்னும் மூலிகைகளால் ஆன மூலவர் முருகனுக்கு அபிஷேகம் செய்த பால், பஞ்சாமிர்தம், திருநீறு, சந்தனம் பக்தர்களின் மனநலம், உடல்நலத்தைக் காப்பதால் ஆன்மிகத்துடன் மருத்துவத்தையும் உள்ளடக்கியதாக இக்கோயில் திகழ்கிறது.
-தொடரும்
ஜெ.ஜெயவெங்கடேஷ்
98421 67567
jeyavenkateshdrs@gmail.com

