ADDED : பிப் 17, 2017 11:11 AM

காவல் தெய்வமான முனீஸ்வரர், மதுரை மீனாட்சியம்மன் கோவில் கிழக்கு கோபுரம் முன்புள்ள அம்மன் சன்னிதி தெருவிலுள்ள, விட்டவாசல் மண்டபத்தில் அருள்புரிகிறார். இவரை 'முனீஸ்பரர்' என்கின்றனர். இங்கு மகாசிவராத்திரி விழாவும், 75ம் ஆண்டு பவள விழாவும் பிப்.24 முதல் 28 வரை நடக்கிறது.
தல வரலாறு: விருத்திராசுரன் என்னும் அசுரன் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்து வந்தான். தேவர் தலைவனான இந்திரனால் அவனை வெல்ல முடியவில்லை. திருமாலைச் சரணடைந்த இந்திரன், தேவர்களைக் காத்தருள வேண்டினான். திருமால் இந்திரனிடம் தவவலிமை மிக்க ததீசி முனிவரின் முதுகெலும்பைப் பெற்று அதை ஆயுதமாகப் பயன்படுத்தினால், அசுரனை வெல்ல முடியும் என வழிகாட்டினார். முனிவரின் உதவியுடன் விருத்திராசுரனைக் கொல்லச் சென்ற போது, அவன் தவம் செய்து கொண்டிருந்தான்.
இருப்பினும் அவனை இந்திரன் கொன்றான். தவம் செய்தவனைக் கொலை செய்த இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் (கொலை பாவம்) உண்டானது. இதிலிருந்து விடுபட தன் குருவான பிரகஸ்பதியின் உதவியை நாடினான். அவர் பூலோகத்தில் சிவத்தலங்களைத் தரிசித்து வர யோசனை கூறினார். கேதாரம், காசி, காஞ்சிபுரம் சென்று விட்டு மதுரை வந்தான். இங்குள்ள சொக்கநாதரைத் தரிசித்ததும் தோஷம் நீங்கியது. தோஷம் விடுபட்ட இடம் 'விட்டவாசல்' என்று பெயர் பெற்றது. அந்த மண்டபத்தில் சிவாம்சமான முனீஸ்பரர் ஜோதி வடிவில் வீற்றிருக்கிறார்.
மகாசிவராத்திரி விழா: சுவாமிக்கு முனீஸ்வரர் என்பது தான் பொதுப்பெயர். ஆனால், மதுரை மீனாட்சியம்மன் கோவில் வடக்கு வாசலில் உள்ள இவரை 'முனீஸ்பரர்' என்று அழைக்கின்றனர். 'பரர்' என்றால் 'பக்தர்கள் வேண்டியதை உடனே கொடுப்பவர்' என பொருள். பிப்.24 மாலை வைகை ஆற்றில் தீர்த்தம் கொண்டு வரப்பட்டு இரவு 10:00 மணி முதல் சுவாமிக்கு மகாஅபிஷேகம் நடக்கும். நான்கு நாளும் கலைநிகழ்ச்சி நடக்கிறது.
மீனாட்சி வரும் வாசல்: மீனாட்சியம்மன் கோவில் திருவிழாக் காலங்களில் அம்பிகையும், சுவாமியும் ராஜகோபுரம் வழியாக எழுந்தருளும் வழக்கம் இல்லை. கிழக்கு கோபுரத்தின் வலப்புறம் உள்ள அம்மன் சன்னிதி நுழைவு வாசலான அஷ்டசக்தி மண்டபத்தின் வழியாகவே வெளியே வருகின்றனர். தங்களை வரவேற்பதற்காக காத்திருக்கும் முனீஸ்பரரை காண்பதற்காகவே இந்த வாசல் வழியாக வருவதாக ஐதீகம்.
தொல்லியல் சின்னம்: மதுரை கிழக்கு கோபுரம் முன்புள்ள கோட்டை பகுதி, அரைகுறையாக கட்டப்பட்டு, பணிகள் கைவிடப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவும் இதை 'விட்டவாசல்' என்பர். இது பாண்டிய மன்னர்களின் கிழக்கு கோட்டை வாசலாக இருந்ததாக பேராசிரியர் சொ.சொ.மீ. சுந்தரமும், தொல்லியல் ஆய்வாளர் கூடல் தென்னவனும் குறிப்பிடுகின்றனர். விட்ட வாசலை தொல்லியல் துறை பாதுகாக்கிறது.
இருப்பிடம்: மதுரை மீனாட்சியம்மன் கோவில் அம்மன் சன்னிதி தெரு.
நேரம்: காலை 6:00 - பகல் 12:00, மாலை 4:00 - இரவு 9:00 மணி.
அலைபேசி: 97902 88593.

