/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
தாயாரை தரிசித்தால் தாய்ப்பால் குறையாது
/
தாயாரை தரிசித்தால் தாய்ப்பால் குறையாது
ADDED : ஆக 25, 2016 12:32 PM

தாய்ப்பால் ஊட்டி வளர்த்தால் தான் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும். சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் போதுமான அளவு இருப்பதில்லை. இப்படிப்பட்டவர்கள் நாகப்பட்டினம் மாவட்டம், திருநாங்கூர் வன்புருஷோத்தம பெருமாள் கோவிலிலுள்ள புருஷோத்தம நாயகி தாயாரை தரிசித்து நிவாரணம் பெறலாம். இத்தலத்தில் கருடசேவை விசேஷம்.
தல வரலாறு: வியாக்ரபாத மகரிஷி, தன் குழந்தை உபமன்யுவை அழைத்துக்கொண்டு திருநாங்கூர் பெருமாள் கோவிலில் உள்ள நந்தவனத்திற்கு வந்தார். வனத்தில் பூப்பறிப்பதற்காக உள்ளே நுழைந்த போது, குழந்தையை நந்தவன வாசலில் அமரச் செய்து விட்டு பூப்பறிக்கச் சென்றார். நீண்ட நேரமாகி விட்டதால் தந்தையைக் காணாத குழந்தை அழ ஆரம்பித்தது. பசியும் வாட்டியது. குழந்தையின் அழுகுரல் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பரந்தாமனுக்கு கேட்டது. உடனே இத்தலத்திற்கு லட்சுமி தாயாருடன் வந்து ஒரு பாற்கடலையே உண்டு பண்ணினார். லட்சுமி தாயார் குழந்தைக்கு பாலூட்டினாள். பின் பெருமாள் வன்புருஷோத்தமன் என்ற பெயரிலும், தாயார் 'புருஷோத்தம நாயகி' என்ற பெயரிலும் இங்கு குடிகொண்டனர்.
தல பெருமைகள்: 108 திருப்பதிகளில் இது 30வது தலம். இத்தல பெருமாள் பற்றி திருமங்கையாழ்வார் பாடும் போது, பெருமாளை ராமனாக வர்ணித்தார். இதைப் பாடுபவர் மட்டுமல்லாது, கேட்பவருக்கும் எல்லாநலனும் கிடைக்கும் என கூறியுள்ளார். இந்த ஊருக்கு வரும் முன் வீட்டில் 47 நாட்கள் தொடர்ந்து விஷ்ணு சகஸ்ர நாம அர்ச்சனை செய்து, 48வது நாளன்று கோவிலுக்கு வந்து நாமம் சொல்லி அர்ச்சனை செய்து வழிபட்டால் எப்படிப்பட்ட பிரச்னையாக இருந்தாலும் பெருமாள் தீர்த்து விடுவார் என்பது ஐதீகம்.
திருச்சி அருகேயுள்ள திருக்கரமனூரிலும், திருநாங்கூரிலும் மட்டுமே வன்புருஷோத்தமன் என்ற பெயரில் பெருமாள் குடியிருக்கிறார். மணவாள மாமுனிகள் இங்கு இரண்டு வருடம் தங்கி பெருமாளுக்கு சேவை புரிந்துள்ளார். இங்கு மூன்று ஆஞ்சநேயர் சன்னிதிகள் உள்ளன. அதில் ராமர் சன்னிதியில் உள்ள ஆஞ்சநேயர் கைகட்டி வாய்பொத்திய நிலையில் உள்ளார். பாசிபடியாத திருப்பாற்கடல் இத்தலத்திலிருந்து வடக்கே அமைந்துள்ளது. இந்த பெருமாளுக்கு செண்பகப்பூ மாலை அணிவிப்பது வழக்கம்.
கருடசேவை விசேஷம்: மூலவர் புருஷோத்தமன் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி,பூதேவி சமேதராக அருள்பாலிக்கிறார். தாயார் புருஷோத்தம நாயகி தனி சன்னிதியில் இருக்கிறாள். பிரகாரத்தில் ஆண்டாள், ராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர், நம்மாழ்வார், உடையவர், சேனை முதலியார் சன்னிதிகள் உள்ளன. இங்கு ஆவணி மாதம் பவுர்ணமியில் பவித்ர உற்சவம் நடக்கிறது. தை அமாவாசைக்கு மறுநாள் நடக்கும் கருட சேவை மிகவும் முக்கியமானது. 11 கோவில்களில் இருந்து கருட வாகனங்களில் எழுந்து வரும் பெருமாளைத் தரிசிக்க முடியும்.
நேரம்: காலை 9:00 - 11:30, மாலை 6:00 - 8:00 மணி.
இருப்பிடம்: சீர்காழி - நாகப்பட்டினம் சாலையில் 7 கி.மீ., தூரத்தில் அண்ணன் பெருமாள் கோவில். இங்கிருந்து பிரியும் சாலையில் 2 கி.மீ. சென்றால் திருநாங்கூர்.

