ADDED : நவ 19, 2010 03:27 PM

பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஒரேயொரு அறை மட்டும் பூட்டிக்கிடந்தது. அந்த அறையை தள்ளிப்பார்த்தனர். உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது தெரிந்தது. எல்லா உறவினர்களும் வந்துவிட்டனர். அவர்கள் தங்கள் பலம் கொண்ட மட்டும் கதவை தட்டிப்பார்த்தனர். பதில் ஏதும் இல்லை. பயம் ஆட்டிப்படைத்தது. வேறு வழியின்றி கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். ஒரு மூலையில் நரேந்திரனும், அவனது தோழனும் நிஷ்டையில் இருப் பதை பார்த்தனர். தாய் புவனேஸ்வரி மகனை அன்புடன் அணைத்துக் கொண்டாள். இப்படியாக ராமன் மீது இளம் வயதிலேயே அபார பக்தி வைத்திருந்தார் விவேகானந்தர். ஆனால், இது நீண்ட நாள் நிலைக்கவில்லை. ஒரு முறை இல்லறவாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களைப் பற்றி யாரோ சிலர் பேசிக்கொண்டிருக்கும் போது நரேந்திரன் கேட்டு விட்டான். அவனது சிறிய மூளை வேறு விதமாக சிந்தித்தது. திருமண வாழ்வில் இவ்வளவு கஷ்டங்கள் இருக்கிறது என்றால் நாம் வணங்கும் ராமரே இதே தவறை அல்லவா செய்திருக்கிறார்! தவறு செய்த ராமன் எப்படி கடவுளாக முடியும். ''நான் இனிமேல், இந்த ராமனை வணங்க மாட்டேன்,'' என கூறிவிட்டு, சீதாராமர் பொம்மையை தூக்கி வீசினான். பொம்மை நொறுங்கிவிட்டது.
அம்மாவிடம் ஓடிச் சென்றான். கதறி அழுதான்.
''அம்மா! எனது ராமன் தவறு செய்து விட்டான். அவன் இல்லறத்தில் இறங்கியது தவறு. அதன் காரணமாக அவன் பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறான். எனவே, ராமனை வணங்க மாட்டேன். எனக்கு வேறு ஏதாவது வழி சொல்,'' என்றான்.
புவனேஸ்வரி அவனைத் தேற்றினாள்.
''இதற்காக கவலைப்படாதே! உனக்கு கல்யாணம் செய்த சுவாமிகளை பிடிக்கவில்லை என்றால், திருமணமே செய்து கொள்ளாத சுவாமியின்
பொம்மையை தருகிறேன். காசியில் இருக்கும் கைலாசநாதர் தவயோகத்தில் இருப்பவர். அவரது சிலையை உனக்கு தருகிறேன். அந்த துறவியின் பொம்மையை வைத்து விளையாடு. அந்த பொம்மைக்கு பூஜை செய்,'' எனச் சொல்லி விஸ்வநாதரின் தவக்கோல பொம்மையைக் கொடுத்தாள்.
இந்த பொம்மைதான் நரேன் என்ற சிறுவன், 'விவேகானந்தர்' என்ற மாபெரும் சக்தியாக உருவெடுக்க காரணமாயிற்று. கைலாசநாதரின் துறவிக் கோலத்தை நரேன் பெரிதும் ரசித்தான். அவரைப்போலவே தாமும் ஒரு துறவியாக வேண்டும் என அப்போதே முடிவெடுத்து விட்டான்.
அந்த பொம்மையின் முன்னால் அமர்ந்துவிட்டால் எதைப்பற்றியும் கவலைப்படமாட்டான். தன் நண்பர்களை, ''தியானவிளையாட்டுக்கு வருகிறாயா?'' எனச் சொல்லி அழைப்பார். பல நண்பர்கள் வருவார்கள். ஒருநாள், அவர்கள் தியானம் செய்து கொண்டிருந்த போது, ஒரு நல்லபாம்பு அந்த வழியாக வந்தது. அது சீறிய சத்தம் கேட்டு மற்ற நண்பர்கள் தியானம் கலைந்து எழுந்தனர். நரேந்திரனையும் எழுப்பினர். ஆனால், நரேந்திரன் ஆழ்ந்த தியானத்தில் இருந்ததால், யாராலும் எழுப்ப முடியவில்லை. அவர்கள் ஓடி விட்டனர். நல்ல பாம்பு நரேன் அருகே வந்தது. படமெடுத்து அவன் முன்னால் நின்றது. என்ன நினைத்ததோ தெரியவில்லை. மீண்டும் ஊர்ந்து சென்றுவிட்டது. எதற்கும் கலங்காத உள்ளம் கொண்ட இவனைத் தீண்டினால் கூட, தன் விஷம் எடுபடாது என்று அந்த நாகராஜப்பாம்பு நினைத்து விட்டதோ என்னவோ!
1870ல், ஈஸ்வரசந்திர வித்யாசாகர பள்ளியில் நரேன் சேர்ந்தான். மிகவும் துடிப்பாக இருப்பான். கோலி விளையாட அவனுக்கு மிகவும் பிடிக்கும். மல்யுத்தம் அதைவிட பிடித்த விளையாட்டு. வகுப்பு இடைவேளையில் விளையாட்டு மைதானத்தில் தான் அவனைப்பார்க்க முடியும். அதுமட்டுமின்றி, ஏதேனும் தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் சிறுவயதிலேயே அவனது மனதில் எழுந்தது. அதற்கு
அச்சாரமாக கல்கத்தாவில் ஒரு கேஸ் தொழிற்சாலையையும், சோடா கம்பெனியையும் வைத்தான்.
பள்ளியில் படித்துக் கொண்டே இந்த தொழிலையும் அவன் கவனித்துக் கொண்டான். ஒரு கட்டத்தில் பள்ளியில்
ஆங்கில வகுப்பு துவங்கினர். அந்நியமொழி என்பதால் நரேந்திரனுக்கு அது பிடிக்கவில்லை. இருந்தாலும் ''எதிர்கால நன்மை கருதியும், வெளிநாட்டினருடன் பேசுவதற்கு அது உதவிசெய்யும் என்ற ஆசிரியர்களின் அறிவுரைக்கும், வற்புறுத்தலுக்கும் இணங்க அதையும் கருத்தூன்றி படித்தான். பிற்காலத்தில் சிகாகோ நகரில் அரியதொரு சொற்பொழிவை நிகழ்த்த இந்த மொழி அவனுக்கு கை கொடுத்தது. பிறருக்கு ஒரு துன்பம் வந்தால் நரேந்திரனால் பொறுத்துக் கொள்ள முடியாது. பள்ளியில் படிக்கும் காலத்தில் ஒரு ஆசிரியர் தன் சகமாணவனை அடித்து விட்டார் என்பதற்காக நரேந்திரன் ஒரு பெரும் போராட்டமே நடத்திவிட்டான்.
ஒரு நாள், ஏதோ ஒரு காரணத்திற்காக ஆசிரியர் ஒரு மாணவனை கடுமையாக அடித்துவிட்டார். அதைப் பார்த்து விவேகானந்தரின் நாடி நரம்புகள் துடித்தன. அந்த ஆசிரியரை கேலி செய்யும் வகையில் சத்தம் போட்டு சிரித்தார். உடனே, ஆசிரியரின் கோபம் நரேந்திரன் மீது திரும்பியது. ''நீ உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் உன்னையும் அடித்து நொறுக்குவேன்,'' என எச்சரித்தார். நரேந்திரன், அதைக் கண்டு கொள்ளவே இல்லை. தொடர்ந்து சிரித்துக் கொண்டிருந்தார். ஆசிரியருக்கு ஆத்திரம் அதிகமாயிற்று. நரேந்திரனின் காதைப் பிடித்து திருகினார். அவனோ, சற்றும் கண்டு கொள்ளவில்லை. திருகிய திருகில் காதில் இருந்து ரத்தமே வழிய ஆரம்பித்து விட்டது. அப்போது தான், நிலைமையை புரிந்து கொண்ட நரேந்திரன் ஆத்திரமும், அழுகையும் பொங்க, ''இனி மேலும் என் காதை திருகினால் நான் சும்மா விடமாட்டேன். என்னை அடிக்க நீங்கள் யார்? ஜாக்கிரதையாக இருங்கள். இனி மேல் என் அருகில் நீங்கள் வரக்கூடாது, ''என சப்தம் போட்டான். அந்த சமயத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளே வந்தார். அவரிடம் நடந்ததை தைரியமாக சொன்னான். இனிமேல் பள்ளிக்கே வரமாட்டேன் என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான். ஆனாலும், தலைமையாசிரியர் அவனைச் சமாதானம் செய்து வகுப்பில் இருக்க வைத்தார். அவரது விசாரணையில் ஆசிரியரின் பக்கம் நியாயம் இல்லை என்பது தெரியவந்தது. ஆசிரியரை அவர் கண்டித்தார். -தொடரும்