/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
டும்...டும் ஒலிக்க நந்தி கல்யாணம் பாருங்க!
/
டும்...டும் ஒலிக்க நந்தி கல்யாணம் பாருங்க!
ADDED : மார் 27, 2021 04:02 PM

நாளாம் நாளாம் திருநாளாம் என திருமண நாளுக்காக ஏங்கும் கன்னியர் மனக்குறை போக்க அரியலுார் மாவட்டம் திருமழபாடி கோயிலில் உள்ள நந்தீஸ்வரரும், சுயசாம்பிகை அம்மனும் காத்திருக்கின்றனர். இங்கு பங்குனி புனர்பூசத்தன்று (மார்ச் 23) திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
திருவையாறில் வசித்த சிலாத முனிவர் குழந்தை பாக்கியம் வேண்டி தவமிருந்தார். ''முனிவரே! புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்'' என அசரீரி கேட்டது. யாகத்தை நடத்த நிலத்தை சீர்படுத்திய போது பெட்டி ஒன்று பூமிக்கடியில் கிடைத்தது. அதில் மூன்று கண்கள்,
நான்கு தோள்கள், சந்திரனை அணிந்த முடியுடன் ஒரு குழந்தை இருந்தது. திகைப்புடன் பெட்டியை மூடி மீண்டும் திறந்த போது அழகிய ஆண் குழந்தையாக மாறியது.
அப்போது வானில் '' 16 ஆண்டுகள் மட்டுமே குழந்தை உமது பிள்ளையாக இருக்கும்'' என அசரீரி கேட்டது. ஜபேசன் என பெயரிட்டு குழந்தையை வளர்த்தார்.
பதினான்காம் வயதில் சிலாதரின் மூலம் உண்மையை அறிந்த ஜபேசர் திருவையாறு கோயில் குளத்தில் ஒற்றைக்காலில் நின்று தவமிருக்கத் தொடங்கினார். தண்ணீரில் வாழும் உயிர்களால் இடையூறு ஏற்பட்டும் தவத்தை விடவில்லை. இவரது பக்தியைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் நீண்ட காலம் வாழும் பாக்கியத்தை வழங்கினார். அதன் பின் ஜபேசருக்கும், சுயசாம்பிகை என்னும் பெண்ணுக்கும் திருமழபாடி கோயிலில் திருமணம் நடந்தது. அதன் பிறகு கயிலாயத்தின் பிரதான வாயில் காவலர் என்னும் பதவியும், நந்தீஸ்வரர் என்னும் பட்டமும் கிடைக்கப் பெற்றார்.
'நந்தி திருமணத்தை தரிசித்தால் முந்தி திருமணம் நடக்கும்' என்ற பழமொழி உண்டு. கன்னியர், இளைஞர்கள் பங்குனி புனர்பூசத்தன்று இங்கு சுவாமியை ஒருமுறை தரிசித்தாலே பலன் கிடைக்கும். பாலாம்பிகை, சுந்தராம்பிகை என இரு அம்மன் சன்னதிகள் உள்ளன. சிவனுக்கும் நந்திக்கும் நடுவிலுள்ள மூன்று குழிகளை நவக்கிரகங்களாக கருதி தீபமேற்றுகின்றனர். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்கின்றனர். கடும் ஜுரத்தால் பாதிக்கப்பட்டோர் ஜுரஹர தேவருக்கு புழுங்கல் அரிசியில் ரசம் சாதம் படைத்து வழிபடுகின்றனர்.
எப்படி செல்வது
* தஞ்சாவூரில் இருந்து 25 கி.மீ.,
* லால்குடியிலிருந்து 35 கி.மீ..
* அரியலுாரில் இருந்து 22 கி.மீ.,
விசேஷ நாள்
ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி
நேரம்
காலை 6:30 - 12:30 மணி
மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 98433 60716, 85259 38216
அருகிலுள்ள தலம்: தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் (28 கி.மீ.,)
நேரம்
காலை 6:00- 12:00 மணி
மாலை 4:00 - 9:00 மணி
தொடர்புக்கு : 04362 - 274 476, 223 384