/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
வெற்றிலை மாலை உங்களுக்கு! வெற்றிகள் யாவும் எங்களுக்கு!
/
வெற்றிலை மாலை உங்களுக்கு! வெற்றிகள் யாவும் எங்களுக்கு!
வெற்றிலை மாலை உங்களுக்கு! வெற்றிகள் யாவும் எங்களுக்கு!
வெற்றிலை மாலை உங்களுக்கு! வெற்றிகள் யாவும் எங்களுக்கு!
ADDED : டிச 23, 2016 10:36 AM

பணியாளன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரண புருஷராக திகழ்ந்து, ராமபிரானுக்கு சேவை செய்தவர் அனுமன். திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தில் இவர் அருள்பாலிக்கிறார். இவருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால், நினைத்த செயல்களில் வெற்றி பெறலாம்.
தல வரலாறு: ராவணனால் கடத்தப்பட்ட சீதையைத்தேடி அனுமன் தென்திசைக்கு சென்றார். வழியில் ஒரு குகைக்குள் இருந்து இறகுகள் நனைந்த நிலையில் சில பறவைகள் வந்ததைக் கண்டார். அந்த குகைக்குள் சென்றார். அங்கு பெரிய மாளிகைகள் மற்றும் சோலைகளுடன் ஒரு நதி இருந்தது. நதி நீரைப் பருகி தாகம் தீர்த்துக் கொண்டார். அந்த நதி கங்கையின் ஒரு பகுதி என்றும், ஒரு சந்தர்ப்பத்தில் இந்திரன் அதில் நீராடி, பாவ விமோசனம் பெற்றதையும் தெரிந்து கொண்டார். சுயம்பிரபை என்ற தேவலோக பெண் அங்கிருந்தாள். அனுமனின் பயண நோக்கத்தை அவள் தெரிந்து கொண்டாள்.
ராமருக்கு உதவுவதற்காக செல்லும் அனுமன், இங்கு வருவார் என்றும், அவரிடம் தீர்த்தத்தைக் காக்கும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, தேவலோகம் திரும்பும்படியும் இந்திரன் சொன்னதாக கூறினாள்.
அதைக்கேட்ட அனுமன், தான் சீதையைக் கண்டு பிடித்து ராமரிடம் ஒப்படைத்தபின், அங்கு வருவதாகச் சொல்லிச் சென்றார். அதன்பின் அனுமன் மூலமாக இலங்கையில் சீதை இருந்ததை அறிந்த ராமபிரான், ராவணனை அழித்து அயோத்தி திரும்பினார். அவர்கள் இவ்விடத்தைக் கடந்தபோது, அனுமன் முன்னர் நடந்ததைக் கூறினார்.
ராம பட்டாபிஷேகம் முடிந்தபிறகு இங்கு வந்த ஆஞ்சநேயர் தீர்த்தத்தைக் காக்கும் பொறுப்பை ஏற்றார். இதன் அடிப்படையில், பிற்காலத்தில் இங்கு அனுமனுக்கு கோவில் எழுப்பப்பட்டது. இவருக்கு, 'அபயஹஸ்த ஜெயவீர ஆஞ்சநேயர்' என்று பெயர்.
தீர்த்தத்துடன் குகை: அனுமன் சன்னிதி எதிரில் சுயம்பிரபை தீர்த்தமும், அருகில் அவர் தண்ணீர் பருகியதாக கருதப்படும் குகையும் உள்ளது. மழைக்காலத்தில் தீர்த்த குளத்தில் தண்ணீர் இருக்கும். அனுமன் ஜெயந்தியன்று, இந்த குகை முன் பூஜை செய்வார்கள்.
படி பாயாச பிரார்த்தனை: பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற அனுமனுக்கு பாயாசம் வைத்து, அதை தீர்த்தக் கரையில் உள்ள படியில் ஊற்றி சாப்பிட்டு பிரார்த்தனை செய்வர். திட்டங்கள் வெற்றி பெற வெற்றிலை, வடை மாலை சாத்தி வழிபடுவர். கோவில் வளாகத்தில் வன்னி மரவிநாயகர், சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆகியோரும் உள்ளனர். செல்வவளம் பெருக இவர்களை வழிபடுவர்.
அனுமன் ஜெயந்தி விழா: சனிக்கிழமைகளில் சுவாமி முத்தங்கி அல்லது வெள்ளிக்கவச அலங்காரத்தில் காட்சி தருவார். அனுமன் ஜெயந்தி விழா ஆறு நாட்கள் நடக்கிறது. இதையொட்டி லட்சார்ச்சனை நடத்தப்படும். அனுமன் ஜெயந்தியன்று விசேஷ அபிஷேக, பூஜை நடக்கும்.
இருப்பிடம்: மதுரையில் இருந்து 150 கி.மீ., கிருஷ்ணாபுரம் பஸ் ஸ்டாப்பில் இருந்து ஒரு கி.மீ., தூரத்தில் கோவில். செங்கோட்டை ரயிலிலும் செல்லலாம். ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஒரு கி.மீ., தூரம். சனிக்கிழமைகளில் கூட்டம் அதிகம் இருக்கும்.
நேரம்: காலை 8:30 - 11:00, மாலை 5:00 - இரவு 7:30 மணி, சனிக்கிழமைகளில் காலை 8:30 - இரவு 9:00 மணி.

