/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி! வாகை சூட திரிசதார்ச்சனை செய்யுங்க!
/
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி! வாகை சூட திரிசதார்ச்சனை செய்யுங்க!
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி! வாகை சூட திரிசதார்ச்சனை செய்யுங்க!
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி! வாகை சூட திரிசதார்ச்சனை செய்யுங்க!
ADDED : செப் 02, 2012 12:28 PM

எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி வாகை சூட ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் அருகிலுள்ள பவளமலை முருகன் கோயிலில் திரிசதார்ச்சனை செய்து வரலாம்.
தல வரலாறு:
வாயுவும், ஆதிசேஷனும் தமக்குள் யார் சக்திமிக்கவர் என்று போட்டி போட்டனர். வாயு புயலாக மாறி வீசத்துவங்கினார். சக்தி வாய்ந்த மேருமலையையே தகர்க்கும் நோக்கத்துடன், தன்னுடைய முழுபலத்துடன் மலை மீது மோதினார். காற்றின் வேகம் தாளாமல், மலையின் சிகரங்களில் ஒன்று பூலோகத்தில் விழுந்தது. அந்த சிகரமே பவளமலை. ஞானப்பழம் கிடைக்காததால் பெற்றோரிடம் கோபித்த முருகப்பெருமான் பழநியில் தங்கினார். அதன்பிறகு குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக உலகத்தார் வழிபடத் துவங்கினர். அவ்வகையில், பவளமலையிலும், முருகனுக்கு கணவால குல க்ஷேத்திரத்தை சேர்ந்த பக்தர்களால் கோயில் எழுப்பப்பட்டது. இங்குள்ள முருகனுக்கு, முத்துக்குமார சுவாமி என்பது திருநாமம்.
தலச்சிறப்பு:
''பச்சைமலை, பவளமலை எங்கள் நாடு, பரமேஸ்வரன் வாழும் மலை எங்கள் நாடு' என்ற குற்றாலக்குறவஞ்சியில் ஒரு வரி இருக்கிறது. அதில் குறிப்பிடப்படுவதும், முல்லைக்கு தேர்கொடுத்த பாரி ஆண்ட பகுதி என்ற பெருமை கொண்டதும் இந்த பவளமலையே. தூர்வார ரிஷி இத்தலத்து முருகனை வணங்கியுள்ளார். செட்டிநாட்டு பாடல் பெற்ற தலம். இக்கோயில் பழமையானது. விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர்.
திரிசதார்ச்சனை:
'திரி' என்றால் மூன்று, 'சதம்' என்றால் நூறு. திரிசதை என்றால் 300. முருகப் பெருமான் சூரனை சம்ஹாரம் செய்த பின், இந்திரன் முதலான தேவர்கள் கூடி, அவருக்கு செய்த அர்ச்சனையே திரிசதார்ச்சனை. வெற்றியைப் புகழ்ந்து செய்ததால் இதற்கு 'சத்ரு சம்ஹார திரிசதார்ச்சனை' என்று பெயர் வந்தது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்து தொழிலும் ஈஸ்வரனை போன்று முருகனுக்கும் இருக்கிறது என்று போற்றப்படும் அர்ச்சனையாக விளங்குகிறது. சூரசம்ஹாரம், வள்ளிதேவசேனா கல்யாணம், தந்தைக்கு உபதேசம், தேவர் குலம் காக்க, பிரம்ம சாஸ்திரம், பக்தர்களுக்கு அனுக்கிரஹம் ஆகிய ஆறு காரணங்களுக்காக முருகனுக்கு ஆறுமுகம் ஏற்பட்டது. அதிலிருந்து 'சரவணபவ' என்ற ஆறெழுத்து மந்திரம் (க்ஷடாசரம்) உருவானது. கேடு மற்றும் இடையூறு நீங்க, ஒரு முகத்திற்கு 50 அர்ச்சனை வீதம் ஆறுமுகத்துக்கு 300 மந்திரங்கள் சொல்லப்படுகின்றன. இதனால் திருமணத்தடை நீங்குவதுடன், குழந்தைப்பேறும் கிடைக்கிறது. அரசியல் வெற்றி, தொழிலில் அபார வளர்ச்சி, எதிரிகளை முறியடித்தல் ஆகியவற்றுக்காக வும் இந்த அர்ச்சனையைச் செய்கின்றனர்.
செவ்வாய் தோஷ பரிகாரம்:
பவளத்தின் நிறம் சிவப்பு, சிவப்பின் அதிபதி செவ்வாய். செவ்வாயின் அதிதேவதை சுப்பிரமணியர். பவளமலையில் திரிசதார்ச்சனை செய்வதன் மூலம் செவ்வாய் தோஷம் நீங்குகிறது. செவ்வாய்கிழமை மாலை ஐந்து மணிக்கு பருப்பு பாயாசம், உளுந்தவடை நைவேத்தியமாக படைக்கப்பட்டு திரிசதார்ச்சனை நடக்கும்.
தவத்தில் வள்ளி தெய்வானை:
மூலவர் முத்துக்குமார சுவாமி பிரம்மசாரியாக எழுந்தருளியுள்ளார். வாயு மூலையில் வள்ளி தெய்வானை முருகனைத் திருமணம் செய்து கொள்வதற்காக தவம் இருக்கின்றனர். அதாவது, திருமணத்துக்கு முந்தைய வள்ளி, தெய்வானையை இங்கு தரிசிக்கலாம். கைலாசநாதர், பெரியநாயகி அம்பாள் சந்நிதியும் உள்ளது. செவ்வாய் காலை சுவாமிக்கும், அம்பாளுக்கும் பால் அபிஷேகம் செய்யப்படுகிறது.
நோய்களை குணப்படுத்தும் லிங்கம்:
முருகன் சந்நிதி அருகில் கைலாசநாதர் லிங்கம் அருகிலுள்ள வயல்வெளியில் புதைந்திருந்தது. விவசாயிகள் வயலை உழும் போது லிங்கம் கிடைத்தது. விவசாயிகள் இதனை எடுத்து வந்து கோயிலில் பூஜித்துவருவதால் அதை சுயம்புலிங்கமாக (தானாகவே தோன்றும் லிங்கம்) கருதுகின்றனர். கைலாசநாதரை வணங்கி னால் நோய் குணமடைகிறது.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், ஆடிகிருத்திகை திருப்படி விழா, கந்தசஷ்டி.
திறக்கும் நேரம்:
காலை 6- பகல்1, மாலை 4- இரவு 8.
இருப்பிடம்:
ஈரோட்டிலிருந்து 35 கி.மீ., தூரம் கோபிசெட்டிப்பாளையம். அங்கிருந்து அந்தியூர் டவுன் பஸ்சில் 3 கி.மீ., சென்றால் முருகன்புதூர் பஸ் ஸ்டாப். அருகில் கோயில்.
போன்:
04285 222 405.