ADDED : பிப் 11, 2011 02:16 PM

திருவனந்தபுரத்தில் ஜாதி மத பேதமின்றி அனைத்து மக்களும் கொண்டாடும் திருநாள் மாசிப் பொங்கல் திருவிழா. கின்னஸ் சாதனை படைத்து வரும் இந்த நிகழ்ச்சி ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பிப்.19ல் நடக்கிறது. பெண்கள் மட்டுமே இந்த விழாவில் பங்கேற்க முடியும்.
தல வரலாறு : மதுரையை எரித்த கற்புக்கரசி கண்ணகியின் அவதாரம்தான் ஆற்றுக்கால் பகவதி. கண்ணகியின் கணவன் கோவலன் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் ஆணையால் கொல்லப்பட்டான். கண்ணகி நீதி கேட்டதும், மன்னன் தான் செய்த தவறை உணர்ந்து உயிர்விட்டான். இருந்தும், அவள் மதுரையை எரித்தாள். பின்னர், சேரநாட்டிலுள்ள கொடுங்கலூரில் தங்கினாள். அங்கு சேரமன்னன் கண்ணகிக்கு கோயில் கட்டினான். கொடுங்கலூர் செல்லும் வழியில் ஆற்றுகாலிலுள்ள கிள்ளியாற்றின் கரையிலும் தங்கினாள். அங்கும் ஒரு கோயில் எழுப்பப்பட்டது.
சிறப்பம்சம் : சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் காலத்திலேயே இந்தக் கோயில் கட்டப்பட்டதாக ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது. பகவதியை இவ்வூரின் தாயாக கருதுகிறார்கள். தங்கள் இல்லங்களில் நடக்கும் எந்த விசேஷமாக இருந்தாலும் முதல் மரியாதை இந்த அம்மனுக்கு தான். ஆதிசங்கரர் இத்தலத்தில் யந்திர பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவருக்கு பின் வித்யாதிராஜ சட்டம்பி சுவாமிகள் இத்தலத்தில் நீண்ட காலம் தங்கியிருந்ததாகவும் கூறுவர். இத்தலத்து அம்மன் கத்தி, கேடயம், சூலம், அட்சய பாத்திரத்தை ஏந்திய நிலையில் அரக்கி ஒருத்தியை அடக்கி அவள் மேல் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். தீய குணங்களை அடக்க வேண்டும் என்பதை இது குறிக்கிறது. பொங்கல் விழாவில் கண்ணகி வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட பாடல்கள் பாடப்பெறுகிறது. சிற்பங்களிலும் கண்ணகியின் கதை காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.
நுழைவு வாயிலில் ÷க்ஷத்திர பாலகிகள் உள்ளனர். மூலஸ் தானத்தில் இரண்டு விக்ரகங்கள் உள்ளன. புராதனமான மூலவிக்ரகத்தின் மீது ரத்தினங்கள் பதித்து தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது. மூலவிக்ரகத்தின் கீழ் அபிஷேக விக்ரகம் உள்ளது. இதைத்தான் பக்தர்கள் தரிசிக்க முடியும். கோயில் முழுவதும் செம்புத்தகடால் வேயப்பட்டுள்ளது. பிரகாரத்தில் கணபதி, சிவன், நாகர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் சந்நிதிகள் உள்ளன. கோபுரங்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள், கண்ணகியுடன் இக்கோயிலுக்குஉள்ள தொடர்பை எடுத்துக் காட்டுகிறது.
வழிபாட்டு முறை: முழுக்காப்பு, பஞ்சாமிர்த அபிஷேகம், களபாபிஷேகம் (சந்தன அபிஷேகம்), கலசாபிஷேகம், அஷ்டதிரவிய அபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், லட்சார்ச்சனை, பகவதி சேவை, பந்திருநாழி, 101 பானை பொங்கல், சுற்றுவிளக்கு, ஸ்ரீபலி, வித்யாரம்பம், குழந்தைகளுக்கு சாதமூட்டல், துலாபாரம் ஆகிய வழிபாடுகள் இங்கு சிறப்பு.
திருவிழா : மாசி மாதம் பத்து நாட்கள் நடக்கும் 'பொங்காலை' எனப்படும் பொங்கல் திருவிழா, நவராத்திரி, சிவராத்திரி, ஆடி வெள்ளி.
திறக்கும் நேரம் : காலை 4.30 - 12.30 மணி, மாலை 5- இரவு 8.30 மணி.
போன் : 0471- 245 6456, 246 3130, 2455 600, 2455 700.