
நினைத்தது நடக்கவிலலையே என்ற ஏக்கமா... மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகிலுள்ள கிண்ணிமங்கலம் ஏகநாதரை பிரதோஷத்தன்று தரிசியுங்கள். அவர் தீர்த்து வைப்பார்.
மதுரை நாகமலையைச் சேர்ந்த அருளானந்த சத்குரு சுவாமி, தன் சமாதிக்கான இடத்தை தேர்ந்தெடுக்க விரும்பினார். சிறுவன் ஒருவனிடம், துளை உள்ள கிண்ணியை (கிண்ணம்) கொடுத்து பால் கொண்டு வரும்படி கூறினார். துளை இருந்தாலும் அதில் பால் சிந்தவில்லை. இதை பார்த்து பயந்த அவன் எல்லோரிடமும் தெரிவிக்கவே, மக்கள் தங்களின் பகுதிக்கு வரும்படி சுவாமியை அழைத்தனர்.
சமாதி எங்கு இருக்க வேண்டும் என்பதை இந்த கிண்ணம் தீர்மானிக்கும் எனச் சொல்லி வான் நோக்கி வீசினார். அது ‛மங்கலப்பட்டி' கிராமத்தில் விழுந்தது. கிண்ணி விழுந்த இடத்தை ‛கிண்ணி மங்கலம்' என அழைக்கின்றனர்.
நாகமலையை விட்டு கிண்ணிமங்கலம் வந்தார். அங்கு குட்டிச்சுவர் ஒன்றின் மீது அமர்ந்து மக்களுக்கு ஆசியளித்தார். பிரசாதமாக மண்ணைக் கொடுக்க.. அது அவரவர் விரும்பிய பொருளாக மாறியது. அந்த நேரத்தில் அப்பகுதி வழியே வந்த மன்னரை யாரும் பொருட்படுத்தவில்லை.
‛மன்னனாகிய என்னை அலட்சியப்படுத்தும் அளவுக்கு இந்த குட்டிச்சுவர் சாமியாருக்கு செல்லவாக்கா?' என் மன்னர் கோபித்தார். உடனே சுவாமி குட்டிச்சுவரை தட்டிக் கொடுக்க, அது குதிரையாக மாறி வானில் பறந்தது. அந்த அதிசயம் கண்ட மன்னர் மன்னிப்பு கேட்டதோடு, குதிரை வட்டமிட்ட பகுதியை மானியமாக கொடுத்தார். இங்கு சுவாமி சமாதி அடைந்தார். அந்த இடத்தில் ‛ஏகநாதர்' என்னும் பெயரில் சிவனுக்கு கோயில் கட்டப்பட்டது.
கருவறையை அடுத்துள்ள அர்த்த மண்டபத்தில் ஆனந்தவள்ளி அம்மன் அருள்புரிகிறாள். கன்னி மூலை கணபதி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், பைரவர், வீரபத்திரர் சன்னதி உள்ளன. சுவாமி சமாதி அடைந்த வைகாசி பூரத்தன்று குருபூனை நடக்கிறது.
பிரதோஷத்தன்று சிவன், நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்கின்றனர்.
எப்படி செல்வது: மதுரை - தேனி சாலையில் 18 கி.மீ., தூரத்தில் செக்கானூரணி. அங்கிருந்து திருமங்கலம் சாலையில் 4 கி.மீ.,
விசேஷ நாள்: சனிப்பிரதோஷம், திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி.
நேரம்: காலை 6.00 - 10.30 மணி; மாலை 5.30 - 8.00 மணி
அருகிலுள்ள கோயில்: திருமங்கலம் மீனாட்சியம்மன் 16 கி.மீ., (சுமங்கலி பாக்கியம் பெற...)
நேரம்: காலை 6.30 - 11.30 மணி; மாலை 5.00 - 9.00 மணி
தொடர்புக்கு: 0452 - 234 2782