ADDED : டிச 10, 2012 11:21 AM

கோயில்களில் இறைவனைச் சுமந்து வரும் கருடன், அனுமன், சிம்மம் முதலானவற்றை வாகனங்கள் என்போம். ஆனால், ஒரு வாகனத்தையே சுமக்க ஒரு வாகனம் இருப்பது தெரியுமா! பெருமாள் கோயிலில் மூலவருக்கு நேராக கைகளைக் கூப்பிய நிலையில் இருப்பவர் கருடன். இவரை 'கருடாழ்வார்' என்பர். வைகுண்டத்தில் இருந்து திருப்பதி மலையான சப்தகிரியை
பூலோகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தவர். அங்கிருக்கும் ஏழுமலைகளில் கருடாத்ரியும் ஒன்று. பெருமாளுக்கு வாகனம் கருடன். ஆனால், அந்த கருடனுக்கு ஒரு வாகனம் இருப்பதாக விஷ்ணு சகஸ்ரநாமம் கூறுகிறது. 'சுபர்ணோ வாயு வாஹனா:'' என்று கருடனைக் குறிப்பிடுகிறது. அதாவது காற்றே அதன் வாகனம். கருடமந்திரமான 'கருடபஞ்சாட்சரிக்கு' உடனே பலன் தரும் சக்தி உண்டு. திருவிழா காலத்தில் கருடசேவையில் பெருமாளைத் தரிசிப்பது சிறப்பு. கருடனைப் பார்ப்பதும், அதன் குரலைக் கேட்பதும் நன்மையின் அறிகுறி. சுவாதியன்று மாலைநேரத்தில் கருடதரிசனம் மிகவும் விசேஷம்.