விநாயகரைக் காட்டிலும் உடல் பருமனான தெய்வம் வேறில்லை. யானையின் தலை. பெரிய வயிறு. பெரிய உடம்பு. இதனால் அவருக்கு 'ஸ்துால காயர்' என்றே பெயருண்டு. ஆனாலும் அவர் சின்னக் குழந்தையாக காட்சி தருகிறார்.
சரி. குழந்தைக்கு எது அழகு? தொப்பையுடன் கொழு கொழு என்று இருந்தால்தான் அழகு. இப்படி குண்டாக இருக்க வேண்டும் என்பதை இவரின் கையில் உள்ள மோதகம் உணர்த்துகிறது. ஆனால் எளிய பிராணியான மூஞ்சூறுவை வாகனமாக கொண்டிருக்கிறார். இது எதைக் காட்டுகிறது?
இது நம்மையும் நம் மனதையும் தொடர்புபடுத்துகிறது. ஆம். நமது உடலை மனம் என்னும் மூஞ்சூறுதான் தாங்கிப் பிடிக்கிறது. மனம் அமைதியாக இருந்தால் எதிலும் வெற்றி கிடைக்கும்.
அமைதி இல்லாதவர்கள் சந்திரன், கடல், மலை, ஆறு, அருவி, யானையை பார்த்தால் மனம் லேசாகும். அதனால்தான் குழந்தைக் கடவுளான விநாயகர் யானை முகத்துடன் இருக்கிறார். இவரை பார்த்தாலே ஆனந்தம் பொங்கும்.