
எழுகடல் மணலை அளவிடில் அதிகம்
எனதிடர் பிறவி அவதாரம்
இனியுன தபயம் எனதுயிர் உடலும்
இனியுடல் விடுக முடியாது
கழுகொடு நரியும் எரிபுவி மறலி
கமலனும் மிகவும் அயர்வானார்
கடனுனது அபயம் அடிமையுடன் அடிமை
கடுகியுன் அடிகள் தருவாயே
விழுதிகள் அழகி மரகத வடிவி
விமலி முன் அருளும் முருகோனே
விரிதலம் எரிய குலகிரி நெரிய
விசை பெறு மயிலில் வருவோனே
எழுகடல் குமுற அவுணர்கள் உயிரை
இரை கொளும் அயிலை உடையோனே
இமையவர் முனிவர் பரவிய புலி
யூரினில் நடமருவு பெருமாளே.
அழகுள்ளவளும், மரகத மயிலாகத் திகழ்பவளுமான பார்வதி பெற்ற பிள்ளையே. விரிந்த கடலையும், கிரவுஞ்ச மலையையும் அழிப்பதற்காக மயிலில் வந்தவனே. ஏழுகடல்களும் கொந்தளிக்க அசுரர்கள் உயிரை உணவாக்க விரைந்து வரும் வேலாயுதம் தாங்கியவனே. தேவர்களும், முனிவர்களும் போற்றும் புலியூரில் நடனம் ஆடுகின்ற பெருமானே. ஏழுகடல் மணல் அளவை விட அதிகமான பிறவிகள் எடுத்து துன்பப்பட்டு விட்டேன்.
இனி என் உயிரும், உடலும் உன் திருவடிக்கே அடைக்கலம். இனி என்னால் பிறப்பெடுத்து உயிரை விட முடியாது. கழுகும், நரியும், நெருப்பும், மண்ணும், எமனும், பிரம்மாவும் எனக்காக பணிசெய்து அலுத்து விட்டார்கள். என் கடமை உன் திருவடியில் அடைக்கலம் ஆவதே. நான் உன் அடிமைக்கும் அடிமை. விரைந்து வந்து திருவடிகளைத் தந்தருள வேண்டும் என்கிறார் அருணகிரிநாதர். கர்ம வினை கழியவும், பிறப்பற்ற நிலையை அடையவும் இதை தினமும் படியுங்கள்.