
கோனார்க்
ஒடிசாவில் உள்ள கோனார்க் சூரியக் கோயிலை 13ம் நுாற்றாண்டில் மன்னர் நரசிம்ம தேவா கட்டினார். 'கோனார்க்' என்பதற்கு 'மூலையில் சூரியன்' என பொருள். சூரியன் பயணிக்கும் தேரை இழுக்கும் ஏழு குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களைக் குறிக்கும். இதிலுள்ள 24 பெரிய சக்கரங்கள் ஒரு நாளின் 24 மணி நேரத்தைக் குறிக்கும். ஏழு நாளும், 24மணி நேரமும் இயங்குபவர் சூரியன் என்பதை இது காட்டுகிறது.
சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 1261 கி.மீ.,
கயா தட்சிணார்கா
பீகார் மாநிலம் கயாவில் உள்ள தட்சிணார்கா கோயில் 13ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. ஆந்திராவின் வாரங்கல் பகுதியை ஆண்ட பிரதாப ருத்ரா இதைக் கட்டினார். கிரானைட் கல்லால் ஆன சூரியனே இங்கு மூலவராக இருக்கிறார். கோயிலின் முன் உள்ள 'சூர்ய குண்டா' குளத்தின் புனித நீரைக் கொண்டு அமாவாசை அன்று தர்ப்பணம் செய்கின்றனர். இதை சூரியனே பிதுர் லோகத்தில் நேரில் சேர்ப்பதாக ஐதீகம். இங்கு செய்யும் தர்ப்பணம் முன்னோரை உடனே சென்றடையும். கோயிலுக்கு அருகில் விஷ்ணுபாதா கோயில் உள்ளது.
சென்னையில் இருந்து 1782 கி.மீ.,
சூர்ய பஹார் கோயில்
அசாம் மாநிலம் கோல்பரா அருகிலுள்ள மலை மீது சூர்ய பஹார் கோயில் உள்ளது. வட்ட வடிவ மாளிகையாக காட்சி தரும் இக்கோயிலில், சூரியனுக்கு 12 விதமான ஓவியங்களும், அவற்றின் நடுவில் சூரியனின் தந்தையான காஷ்யப முனிவரின் ஓவியமும் பிரம்மாண்டமாக வரையப்பட்டுள்ளது. ஒவ்வொரு சூரியனும் கைகளில் தாமரை மலர், ஆயுதங்களை தாங்கியுள்ளனர். மலை அடிவாரத்தில் ஏராளமான சிவலிங்கங்கள் உள்ளன. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் பழுதான நிலையிலும், கலையம்சத்துடன் காட்சியளிக்கிறது.
சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 2579 கி.மீ.,