
சிவபெருமானின் பெருமைகளை சொல்லும் நுால் 'பன்னிரு திருமுறை'. அதில் முதல் ஏழு திருமுறைகளை மூவர் தேவாரம் என்பர்.
'தே' என்றால் தெய்வம் அதாவது சிவபெருமான். 'ஆரம்' என்றால் மாலை. சிவனுக்கு சூட்டப்பட்ட பாமாலை இது. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பு இது. சம்பந்தர் மூன்று வயதிலேயே உமாதேவியிடம் ஞானப்பால் பெற்றார். முருகனின் அவதாரமான இவர் முதல் மூன்று திருமுறைகள் பாடினார்.
இதில் உள்ள 385 பதிகங்களில் 4169 பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பதிகத்திலும் 10 அல்லது 11 பாடல் இருக்கும். முதல் 7 பாடல்களில் சிவனின் கருணை, வீரம், அவர் இருக்கும் கோயில் பற்றியும், 8ம் பாடலில் ராவணன் பற்றியும், 9வது பாடலில் பிரம்மனும், திருமாலும் அடிமுடி தேடியது பற்றியும், 10ம் பாடலில் புத்தர், சமணர் பற்றியும் 11வது பாடலில் பதிகத்தின் பலனும் இடம் பெறும். இதைப் பாடுவோருக்கு நினைத்தது நடக்கும்.
ஞானசம்பந்தரின் திருநீற்றுப்பதிகம், கோளறு பதிகம், பஞ்சாக்கர பதிகம் சிறப்பானவை. நினைத்தது நடக்கவும், விரும்பியது கிடைக்கவும் தேவார பாடல்களைப் பாடுங்கள் அல்லது கேளுங்கள்.
-பி.லட்சுமி