
'புண்ணியம் செய்வாருக்கு பூவுண்டு நீருண்டு' என்கிறது திருமந்திரம். புண்ணியம் இருந்தால் மட்டுமே பகவானுக்கு அபிஷேகம் செய்து பூவால் அர்ச்சனை செய்யும் பாக்கியம் கிடைக்கும்.
புண்ணியம் என்றால் நல்லதை நினைப்பது, சொல்வது, செய்வது. பாவம் என்றால் கெட்டதை நினைப்பது, சொல்வது, செய்வது. 'அவனருளாலே அவன் தாள் வணங்கி' என்கிறார்கள் அருளாளர்கள். கடவுளுக்கு சேவை செய்திட புண்ணியமே உதவுகிறது.
சவுந்தர்ய லஹரியின் முதல் ஸ்லோகத்தில், 'புண்ணிய பலனின் காரணமாகவே இந்த நுாலை படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இல்லாவிட்டால் எப்படி நீ கற்க முடியும்' எனக் கேட்கிறார் ஆதிசங்கரர்.
நாராயணீயத்தை இயற்றிய நாராயண பட்டத்ரியும் முதல் ஸ்லோகத்தில், 'குருவாயூரப்பன் மகிமையை புண்ணியம் செய்தால் மட்டுமே கற்க முடியும்' என்கிறார்.
இதன் மூலம் ஸ்லோகங்களை முழுமையாக நாம் படிப்பதற்கு சங்கரரும், நாராயண பட்டத்ரியும் ஊக்கப்படுத்துகின்றனர். இப்படிப்பட்ட விஷயங்களை இளைய தலைமுறையினருக்கு சொல்லிக் கொடுப்பது பெற்றோரின் கடமை.
-லட்சுமி பாலசுப்ரமணியன்