
மூர்த்தி, (கருவறையில் இருக்கும் சுவாமி) தலம், (அவ்வூரின் பெருமை) தீர்த்தம் (தெய்வீக ஆற்றல் பொருந்தியது) என்கிற இம்மூன்றினை உடையது கோயில் என்கிறார் தாயுமானவ சுவாமிகள். இந்த முச்சிறப்புகளை கொண்டது காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரம் அருகே அமைந்த பழந்தண்டலம் என்னும் தலம்.
இங்கு கஜபிருஷ்ட வடிவத்தில் அமைந்த கருவறையில் ஐராவதீஸ்வரர் என்ற பெயரோடு சிவபெருமானும், தெற்கு நோக்கிய சன்னதியில் ஆனந்தவல்லியாக பார்வதி தேவியும் அருள் பாலிக்கின்றனர்.
பிராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி என்னும் சப்த கன்னியர்கள் இங்குள்ள குளத்தில் நீராடி ஐராவதேஸ்வரரை வழிபாடு செய்துள்ளனர். ஒரு சமயம் தொழுநோயால் அவதிப்பட்ட நல்லம்மாளுக்கு சப்த கன்னியர்கள் ஆசி வழங்கி இக்குளத்தில் நீராடு. நோய் நீங்கப்பெறுவாய் என ஆசியளித்தார்கள். நல்லம்மாவால் திருப்பணி செய்யப்பெற்ற திருக்குளத்தில் நியமப்படி நீராடுபவர்கள் நோய் நீங்கி நலம் பெறுகிறார்கள். அவர்களது வாழ்வும் புனிதம் அடைகிறது.
இக்குளத்தின் கிழக்கு பகுதியில் விநாயகர், நாகாத்தம்மன், நாகர்கள், கங்கா தேவி போன்றோரும் அருள் செய்கின்றனர். அமாவாசை, திங்கட்கிழமை நாட்களில் நீராடி வழிபாடு செய்யுங்கள். வளமான வாழ்விற்கு வளம் சேருங்கள்.இக்கோயில் சென்னை தாம்பரத்தில் இருந்து 8 கி.மீ., தொலைவில் உள்ளது.
-குமார சிவாச்சாரியார்