
கிருதயுகத்தில் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான் முரன் எனும் அசுரன். இதனால் கஷ்டப்பட்டவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர்.
அவரோ பெருமாளிடம் சரணடையும்படி கூறினார். அவர்களும் பெருமாளிடம் வேண்டவே, அவர் அசுரனுடன் போரிடத் துவங்கினார். இறுதியில் அசுரனது படைக்கலன்களை எல்லாம் அழித்தார். பின் அவன் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று எண்ணினார் பெருமாள். இதன்படி போர்க்களத்தில் இருந்து வெளியேறி, ஒரு குகைக்கு சென்று ஓய்வெடுப்பதுபோல் நடித்தார். அப்போதும் அவன் திருந்தாமல் பெருமாளைக் கொல்ல குகைக்கு வந்து வாளை ஓங்கினான். அப்போது அவரது சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. இந்த சக்தியை சாதாரணமாக நினைத்த அசுரன், 'உன்னைக் கொல்ல ஓர் அம்பே போதும்' என அம்பை எடுத்தான்.
அப்போது அந்தப் பெண் எழுப்பிய ஒலியால், அசுரன் சாம்பலாகினான். அதே நேரத்தில் ஏதுமறியாதவர்போல் கண்விழித்த பெருமாள் அந்த சக்தியை பாராட்டி 'ஏகாதசி' என்ற பெயரை சூட்டினார். பின், ''நீ தோன்றிய இந்நாளில் விரதமிருந்து என்னை வழிபடுபவர்களுக்கு, வைகுண்ட பதவியையும் கொடுப்பேன்'' என்று வாக்கும் கொடுத்தார்.