
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண் கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ரத்தம் வழிந்ததைக் கண்ட கண்ணப்பர், தன் வலது கண்ணை தோண்டி அப்பினார். பின் இடக்கண்ணிலும் ரத்தம் வழிந்தது. கண்ணப்பர் தன் இடது கண்ணையும் எடுக்க முயற்சித்தார். ஆனால் சிவலிங்கத்தின் இடப்பாகத்தில் இருந்து ஒரு கை தோன்றி, 'நில்லு கண்ணப்பா' என்று அவரைத் தடுத்தது.
சிவபெருமானின் இடக்கை அவரைத் தடுக்க காரணம் உண்டு. சிவனின் இடப்பாகம் பார்வதிக்கு உரியது. குழந்தையின் துன்பம் கண்ட தாய் போல கண்ணப்பன் துன்பப்படுவதைக் காண பார்வதியின் மனம் சகிக்கவில்லை. அதனால் அவரைத் தடுத்து அருள்புரிந்தாள். முக்கண்ணர் என சிவனைக் குறிப்பிட்டாலும் காளஹஸ்தியில் உள்ள சிவனுக்கு உரியது அரைக்கண் மட்டுமே.
சிவனின் உடலில் பாதி பார்வதி என்பதால், ஒன்றரைக்கண் அம்மனுக்குரியது.
சுவாமியின் வலது கண்ணோ கண்ணப்பர் கொடுத்தது. அதனால் நெற்றிக்கண்ணின் வலதுபாகம் மட்டுமே சிவனுக்குரியது.