
திருமாலிடம் சுதர்சனம் என்னும் சக்கரம், பாஞ்சஜன்யம் என்னும் சங்கு, நந்தகி என்னும் வாள், சாரங்கம் என்னும் வில், கவுமோதகி என்னும் கதாயுதம் என ஐந்து ஆயுதங்கள் உண்டு. இதில் மற்ற ஆயுதங்களுக்கு இல்லாத பெருமை சக்கரத்திற்கு உண்டு.
இதை மட்டும் 'சக்கரத்தாழ்வார்' 'சுதர்சனாழ்வார்' என சொல்வர். பாஞ்சராத்ர ஆகமத்தில் இதற்குரிய வழிபாட்டு முறைகள் உள்ளன. இந்த சக்கரத்தையே திருமாலின் அடியவர்களில் ஒருவராக சக்கரத்தாழ்வார் என அழைக்கிறோம். மூன்று கண்கள் கொண்ட இவருக்கு 16 கைகள் இருக்கும். அதில் சங்கு, சக்கரம், வில், அம்பு, கத்தி, வளை, சூலம், பாசம், தந்தம், தாமரை, வஜ்ரம், கேடயம், கலப்பை, உலக்கை, தண்டம், வேல் ஆகிய கருவிகளைத் தாங்கியிருப்பார். பெருமாள் கோயிலில் தென்மேற்கு திசையில்(கன்னிமூலை) இவருடைய சன்னதி இருக்கும். சனிக்கிழமையன்று துளசிமாலை சாத்தி 12 முறை சுற்றி வந்தால் நல்வாழ்வு தருவார்.