ADDED : ஜூன் 27, 2024 12:49 PM

பெண்களுக்கு அழகுடன் மங்களத்தையும் அளிப்பது குங்குமம். மணப்பெண்ணை வாழ்த்தும் போது 'மஞ்சள் குங்குமத்துடன் வாழ்க' என்றே பெரியவர்கள் வாழ்த்துவர்.
மங்களகரமான குங்குமம் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மங்களத்தை உண்டாக்கும்.
திருமணமான பெண்கள் தான் குங்குமம் வைக்க வேண்டுமா? என்ற கேள்வி பலருக்கும் உண்டு. பிறப்பு முதல் வாழ்வு முடியும் வரை பெண்ணுடன் தொடர்புடையது குங்குமம்.
திருமணத்திற்குப் பின் நெற்றியில் இடுவதோடு சீமந்தப் பிரதேசம் எனப்படும் வகிட்டிலும், திருமாங்கல்யத்திலும் குங்குமம் வைப்பது அவசியம். சுமங்கலிகள் குங்குமம் இல்லாமல் வெறும் நெற்றியோடு இருக்கக் கூடாது.
இன்று நாகரிகம் என்னும் பெயரில் ஸ்டிக்கர் பொட்டு வைக்கின்றனர். நீண்ட நேரம் அழியாமல் இருக்க வேண்டும் என எண்ணினால் ஸ்டிக்கர் பொட்டு வைத்து அதற்கு மேலோ அல்லது கீழோ குங்குமம் வைப்பது நல்லது.
மணமான பெண்கள் குங்குமம் அணிந்தால் பிறர் நம்மை வசியப்படுத்தாமல் தடுக்க முடியும். ஹிப்னாட்டிசம் போன்ற உளவியல் ரீதியான பிரச்னைகளில் இருந்து தப்பலாம்.
புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரத்தை குங்குமம் துாண்டுவதால் விழிப்புடன் செயல்பட முடியும். உடலில் சூடு தணியும். மனதில் புத்துணர்ச்சி மேலோங்கும்.
கர்ப்பிணிகள் குங்குமம் வைத்தால் கருப்பை தொடர்பான பிரச்னை விலகும். மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு, நல்லெண்ணெய் சேர்த்து சுத்தமான முறையில் தயாரிக்கப்படும் குங்குமம் இடுவதால் தெய்வீக சக்தி அதிகரிக்கும்.
மஞ்சள் சிறந்த கிருமி நாசினியாகவும் உள்ளது. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுத்து வழியனுப்பினால் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிலைக்கும்.