ADDED : ஜன 20, 2013 04:36 PM

நம் தேசத்தில் பார்வதி தேவிக்குரிய சக்தி பீடங்கள் பல உள்ளன. அதில் காந்திபீடம் திருநெல்வேலியில் அமைந்துள்ளது.
கயிலையில் சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தது. அப்போது பூமியின் பாரத்தைச் சமப்படுத்த அகத்தியர் பொதிகையில் இருந்தார். அகத்தியருக்காக சிவனும், பார்வதியும் பாபநாசம் என்னும் திருத்தலத்தில் மணக்கோல தரிசனம் தந்தனர். பின்னர் நெல்வயல் வேலியாக அமைந்த திருநெல்வேலிக்கு அகத்தியர் வந்தார். அழகிய அந்நகரில், மணமக்கள் தங்க வேண்டும் என அகத்தியர் விடுத்த வேண்டுகோளை சிவன் ஏற்றார். அது 'காந்திபீடம்' எனப்பட்டது. 'காந்தி' என்றால் 'ஒளி'. இங்கு அம்பிகையின் முகம் மதியைப் (நிலா) போல் ஒளிமிக்கதாய் இருந்தது. இதனால் அவள் 'காந்திமதி' என பெயர் பெற்றாள். நடராஜர் நடனமிடும் பஞ்சசபைகளில் இத்தலம் தாமிரசபை. 14ஏக்கர் பரப்பளவுள்ள இக்கோயிலில் மூன்று தெப்பக்குளங்களும், நான்கு கோபுரங்களும் உள்ளன. சுவாமி கோயிலுக்கும், அம்பாள் கோயிலுக்கும் தனி வாசல், தனி ராஜகோபுரம் உண்டு. இது தவிர சுவாமி, அம்பாள் சந்நிதிகளை கோயிலுக்குள் இருந்தபடியே கடக்க மிக நீண்ட சங்கிலி மண்டபம் இருக்கிறது. காந்திமதி அம்மையின், பாத கமலங்களை சரணடைந்தால் மனதை வருத்தும் துன்பங்கள் நீங்கி, மனசாந்தி பெறலாம்.