ADDED : அக் 27, 2023 11:09 AM

அரியலுார் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம் சிறப்பாக நடக்கும். திருச்சியிலிருந்து 110 கி.மீ., துாரத்தில் உள்ள இங்கு மூலவர் லிங்கம் பதிமூன்றரை அடி உயரம் கொண்டவர். இதற்கு அபிஷேகம் செய்ய நுாறு மூடை அரிசியை சமைப்பர். சோழர் காலத்தில் நடந்த இந்த அன்னாபிஷேகம், காலப்போக்கில் மறைந்தது. ஆனால் காஞ்சி மஹாபெரியவரின் வழிகாட்டுதலால் மீண்டும் தொடங்கப்பட்டது. காலையில் தொடங்கும் அபிஷேகம் மாலை வரை நடக்கும். மூலவரை முழுமையாக அன்னத்தால் அலங்கரிப்பர். அப்போது, சுவாமியின் மீது இருக்கும் ஒவ்வொரு சோற்றிலும் சிவலிங்கம் இருப்பதாக பாவித்து வழிபடுவர். எறும்பு, கால்நடை, பறவை உள்ளிட்ட எல்லா உயிர்களுக்கும் இந்த உணவை வழங்குவர். புளி ரசம் சேர்த்து பக்தர்களுக்கும் பிரசாதமாக கொடுப்பர். சிவன் கோயில்களில் ஐப்பசி பவுர்ணமி அன்று நடத்தப்படும் அன்னாபிஷேகத்தை தரிசிப்பவருக்கு வாழ்வில் உணவு பற்றாக்குறை ஏற்படாது.