
கல்வி வாழ்வின் வளர்ச்சிக்காக துணை செய்ய வேண்டுமே தவிர, பிழைப்புக்காக மட்டும் இருக்கக்கூடாது என்பது பாபாவின் விருப்பம். இதன் அடிப்படையில் பிரசாந்தி நிலையத்தில் ஸ்ரீ சத்யசாய் உயர்கல்வி நிறுவனம், ஸ்ரீ சத்யசாய் மேல்நிலைப்பள்ளி, மிர்புரி இசைக்கல்லூரி, சத்யசாய் குருகுலம் ஆங்கிலப்பள்ளி ஆகிய கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. மாணவர்கள் அனைவருக்கும் கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது.
1981ல் சத்யசாய் உயர்கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. புனிதமான கல்விப்பணி மூலம் அறிவுத்தேடல், மனிதநேயம், ஒழுக்கம் ஆகிய பண்புகளை மாணவர்களிடம் வளர்க்கிறது. 1983ல் சத்யசாய் மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது.
பிரசாந்தி நிலையத்திலுள்ள சத்யசாய் மிர்புரி இசைக்கல்லூரி 2001ல் சாய்பாபாவால் தொடங்கப்பட்டது. கர்நாடக சங்கீதம், இந்துஸ்தானி இசையும் இங்கு மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படுகின்றன. வீணை, மிருதங்கம், தபேலா போன்ற கருவிகள் இசைக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. 13 வயது முதல் 20 வயது வரையுள்ள மாணவர்களுக்கு இரண்டு ஆண்டு அடிப்படை பயிற்சி வகுப்பும், 16 வயது முதல் 23 வயது வரையுள்ள மாணவர்களுக்கு மூன்றாண்டு டிப்ளமோ பயிற்சியும் வழங்கப்படுகிறது.
சாய் அறக்கட்டளை சார்பாக சத்யசாய் சர்வதேசப்பள்ளி டில்லியில் இயங்குகிறது. உண்மை, நேர்மை, அமைதி, அன்பு போன்ற பண்புகளை கற்றுத்தந்து மனித மதிப்பை உயர்த்தும் விதத்தில் இது செயல்படுகிறது. இங்குள்ள குழந்தைகளுக்கான ஆரம்பப்பள்ளியில் சீருடை, நூல்கள், தங்குமிடம் இலவசமாக வழங்கப்படுகிறது. புட்டபர்த்தி, சத்தியசாய்நகர், பிரசாந்திகிராம், தாரக ராம்நகர் (கம்மவாரி பள்ளி) ஆகிய இடங்களில் பள்ளி, கல்லூரி கட்டும் பணிகள் சாய் டிரஸ்ட் மூலம் நடந்து வருகிறது.

