ADDED : ஜூலை 22, 2014 01:49 PM

நாட்டில் நல்ல வார்த்தைகள் காதில் விழுவது என்பதே ரொம்பவும் குறைந்து விட்டது. இந்த சமயத்தில், எல்லாவற்றையும் மறந்து, நாலு நல்லவார்த்தையைக் கேட்போமே!
''சிந்தநீயா ஹி விபதாம் ஆதாவௌ ப்ரதிக்ரியா !
ந கூப கனனம் யுக்தம் பிரதீப்தே வஹ்னினா க்ரிஹே!!'' என்று ஒரு ஸுபாஷிதம் (நல்வார்த்தைகள் கொண்ட ஸ்லோகம்). இதற்கு ஒரே வரியில் பொருள் செல்வதென்றால் 'வரும் முன் தடுக்க வேண்டும்.. வந்து விட்டால் சமாளிக்க வேண்டும்' என்பது தான்.
முன்யோசனை ரொம்ப அவசியம். சிறு பருவத்தில் பள்ளியில் சொல்லிக்கொடுத்த மூன்று மீன்களை பற்றிய பாடம் ஞாபகம் வருகிறது. ஒரு மீனின் பெயர் 'வரும் முன் காப்பான்'; இரண்டாவது 'வரும் பொழுது காப்பான்' மூன்றாவது 'வந்தபின் காப்பான்' மனித சமுதாயத்திலும், இந்த மாதிரி மூன்று வகையான மனிதர்கள் இருக்கிறார்கள்.
ஒரு நாள், வானிலை நல்ல படியாக இருந்தது.
'வரும் முன் காப்பான்' இன்று மீன் பிடிக்க, கட்டாயமாக மீனவர்கள் வருவார்கள் என்று முன் கூட்டியே நினைத்ததால், மீனவர்கள் வரும் இடத்திலிருந்து வெகு தூரம் சென்று விட்டது. போகும் பொழுது, நண்பர்கள் இருவரையும் எச்சரித்தது.
வரும் பொழுது காப்பான், ''நீ கிளம்பு... மீனவர்கள் வரும் பொழுது நான் பார்த்துக்கொள்கிறேன்..'' என்று கூறி விட்டது. மீனவர்கள் வருவதை பார்த்து, அவர்கள் வலையை போடும் சமயத்தில் வலையில் மாட்டிக்கொள்ளாமல், தப்பித்து தன்னை காத்துக்கொண்டது.
வந்த பின் காப்பான், 'தன் மீது வலை விழாது... அப்படி விழுந்தால் பார்த்துக்கொள்ளலாம்' என்று கவலைப் படாமல் நீந்திக் கொண்டிருந்தது. கண்மூடி கண் திறக்கும் சமயத்தில், அதன் மீது வலை விழுந்தது; வசமாக
மாட்டிக்கொண்டது.
விபத்துக்கள் வருவதற்கு முன்பாகவே, விபத்துக்களின் விளைவுகளை நன்கு தெரிந்து கொண்டு, முன் எச்சரிக்கையாக இருப்பது தான் உசிதம். இரண்டாவது, மூன்றாவது மீன்களைப் போல இருந்தால், நாம் தான் ஆபத்தில் சிக்கிக்கொள்வோம்.
உதாரணத்திற்கு, வீடு நெருப்பு பற்றி எரியும்போது தான், கிணறு வெட்டுவதைப்பற்றி சிந்திப்பது, அவ்வாறு சிந்திப்பவரின் முட்டாள்தனத்தை சுட்டிக்காட்டுகிறது. முதலிலேயே யோசித்து கிணறை வெட்டியிருந்தால், ஆபத்துகாலத்தில், வேண்டிய தண்ணீர் கிடைத்திருக்கும். முன் யோசனையுடன் நடந்தால், கடவுளும் நமக்கு உதவி செய்திருப்பார்.
பிரச்னைகளை முன் கூட்டியே எதிர்பார்த்து, அவற்றை தவிர்க்க தேவையான திட்டங்களை தீட்டுவது மிகவும் அவசியம். அதேநேரம், வரும் முன் காப்பானைப் போல, பிரச்னைகளை விட்டு வெகு தூரம் ஓடுவதும் சரி என்று சொல்லமுடியாது. பகுத்தறிவு படைத்த நாம், நெருக்கடி மேலாண்மை பற்றி நன்கு முன்பே யோசிக்க
வேண்டும்; அதற்கு தேவையான திட்டங்களை தீட்ட வேண்டும்; தேவைப்பட்டால் நிபுணர்களுடன் ஆலோசித்து, அவற்றைச் சந்திக்க தயாராகி விட வேண்டும்.
வியாதி பரவும் சமயத்தில், முன் கூட்டியே தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளலாம். விபத்தை எதிர்பார்த்து நம்முடைய வாகனங்களுக்கும், வீடு அல்லது நம் உயிருக்கும் காப்புறுதி செய்கிறோமே, அதே போல, மற்ற செயல்பாடுகளிலும், நாம் அபாயத்தை எதிர்பார்த்து, அவற்றை தவிர்க்க திட்டங்களை முன்கூட்டியே யோசித்து நடைமுறையில் செயல்படுத்தினாலே அபாயங்கள் தவிர்க்கப்படும்.
- தொடரும்