ADDED : ஜூலை 29, 2014 04:33 PM

நல்லதைக் கேட்பதென்பதே அரிதாகி விட்ட இந்தக் காலத்தில், நம் மகான்கள் அன்று சொன்ன நாலு நல்ல வார்த்தைகளை காதில் வாங்கிக் கொள்வோமே! மனிதர்களுடைய எதிரி யார்? எதிரியை எப்படி கண்டுபிடிப்பது? நாம் எதிரியை எவ்வாறு ஆட்கொண்டு, வாழ்வில் வெற்றி வாகை சூடலாம்?
நாம் எப்படி எல்லாம் வல்ல இறைவனின் அன்புக்குப் பாத்திரமாகலாம்?
இவற்றை விளக்கும், ஸுபாஷிதங்களை (நல்ல வார்த்தைகள் கொண்ட ஸ்லோகம்) பார்க்கலாமா?
முதலில் நம்முடைய எதிரியை கண்டுபிடிக்கலாம். அவனை மடக்கி விட்டால், நம் மனம் அமைதி அடையும். அமைதியான மனதுடன் கடவுளை அணுகினால், நமக்கு வெளிச்சம் தெரியுமல்லவா? இதோ ஒரு ஸுபாஷிதம்.
''ஆலஸ்யம் ஹி மனுஷ்யாணாம் சரீரஸ்தோ மகான் ரிபு:
நாஸ்தி உத்யம சமோ பந்து: க்ருத்வா யம் ந அவசீததி''
இதன் விளக்கம் என்ன?
நம்முடைய பெரும் எதிரி வெளியில் இல்லை. உடலுக்குள்ளேயே இருக்கிறது. அது என்ன?
நமக்குள் இருக்கும் சோம்பேறித்தனம்.
சரி...எதிரியைத் தெரிந்து கொண்டு விட்டோம். அப்படியானால், நம்முடைய உயர்ந்த நண்பன் யார் என்றும் தெரிய வேண்டுமல்லவா? ஆர்வத்துடன் நாம் செய்யும் முயற்சி தான், நம்முடைய தலையாய நண்பன்.
முயற்சி திருவினை ஆக்கும்.
முயன்றால், முடியாதது என்று எதுவும் இல்லை. 'உத்தமசீலர்கள்' என்று அழைக்கப்படும், 'விடாமுயற்சி மன்னர்கள்' நிச்சயம் வெற்றியைத் தழுவுவார்கள்.
நம்முடைய குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும் முன், எவ்வளவு தடவை தனது சொந்தக் கால்களில் நிற்க
முயற்சிக்கின்றன? நாம் சைக்கிள் ஓட்ட பழகும்போது, பெடலில் காலை வைத்து, எவ்வளவு முறை தத்தி தத்தி தடுமாறி இருக்கிறோம். கடைசியில், ஒரு நாள், நாம் வலது காலைத் தூக்கி இருக்கையின் வலது புறத்தில் போட்டு, வலது பெடலில் காலை வைத்தோமா இல்லையா? புன்முறுவலுடனும், மகிழ்ச்சியுடனும் சாலையில் சென்றோமா இல்லையா?
நாம், வெகுதூரம் கடந்த காலத்தில் உலவ வேண்டிய அவசியம் இல்லை. 'ஹாரிபாட்டர்'' புத்தகங்களைப் பற்றி நாம் எல்லோரும் நன்கு அறிவோம். பல பதிப்பாளர்கள் பிரசுரிக்க முன் வராவிட்டாலும், ஆசிரியரின்
விடாமுயற்சியால், அவர் அடைந்த வெற்றி, புகழ், செல்வம் எல்லாம் சமீபத்தில் நடந்த உலகறிந்த உண்மை. விடா முயற்சி என்ற நண்பனுடன் தோழமை கொண்டால், இதுபோன்று வெற்றிக் கொடியை நாட்டலாம்.
அதிருக்கட்டும்...சோம்பேறித்தனம் என்ற எதிரியை எப்படி முறியடிப்பது என்று நாம் யோசிக்கவே இல்லையே? அது மிக சுலபம். காலை 5.30 மணிக்கு, அலாரம் அடிக்கிறது. அவன் (சோம்பேறி என்ற எதிரி) உடனே சொல்லுவான்.... ''போர்வையை இழுத்து போர்த்திக்கொள். இன்னும் அரை மணி நேரம் ஆனந்தமாகத் தூங்கு'' என்று...!
உடனே நீங்கள், ''உன் பேச்சை நான் கேட்கத் தயாராக இல்லை'' என்று சொல்லி, படுக்கையிலிருந்து துள்ளிக்குதித்து எழுந்து விடுங்கள்....உங்கள் எதிரி கதறி அடித்துக்கொண்டு, இருந்த இடம் தெரியாமல் ஒடி விடுவான். .