ADDED : ஏப் 21, 2017 12:10 PM

மகாபாரதத்தை உலகிற்கு அளித்த வியாசரின் புதல்வர் சுகபிரம்மர். கிளிமுகம் கொண்ட இவருக்கு நாரதர் உபதேசம் செய்தார். தவத்தில் ஈடுபட்ட இவர், எல்லா உயிர்களிலும் கடவுள் இருப்பதை உணர்ந்தார். ஒரு நதிக்கரை வழியே தந்தையுடன் சுகபிரம்மர் சென்ற போது, நீராடும் தெய்வப் பெண்களை கண்டார். அவர்கள் வயோதிகரான வியாசரை கண்டதும் நாணத்தால் எழுந்து, ஆடையால் தங்களை மறைத்து கொண்டனர். ஆனால், வாலிபரான சுகபிரம்மரை கண்டு அவர்கள் வெட்கப்படவில்லை. 'உங்களின் இந்த மாறுபாடான செயலுக்கு என்ன காரணம்?' என வியாசர் கேட்க, 'எல்லாவற்றையும் சுகபிரம்மர் தெய்வீகமாக காண்பது தான்' என தெரிவித்தனர். இவரே பரீட்சித்து மன்னனுக்கு கிருஷ்ணரின் வரலாற்றினை போதித்தார். இதுவே 'பாகவதம்' என்னும் நூலாக விளங்குகிறது. 'சர்க்கரைப் பந்தலில் பெய்த தேன்மழை' என பாகவதத்தை பெருமையாகச் சொல்வர்.

