
பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்னும் ஆறுகாண்டங்களைக் கொண்டது ராமாயணம். இதில் சுந்தர காண்டத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. 'சுந்தரம்' என்றால் 'அழகு'. தன் மனைவியாகிய சீதாதேவியைப் பிரிந்து வருந்திய ராமபிரானுக்கு அனுமன் மூலம் நல்ல செய்தி கிடைத்தது இந்தக் காண்டத்தில் தான். சொல்லின் செல்வனும் சுந்தரனுமாகிய அனுமனின் அளப்பரிய வீரதீர பராக்கிரமங்கள் வெளிப்படுவது இதில் தான். அசோகவனத்தில் தனிமையில் வாடிய சீதை, “கருணையே உருவான ராமச்சந்திர மூர்த்தி உன்னைத் தேடி வந்து கொண்டிருக்கிறார்” என்று காதில் தேன் பாயும் அருள்மொழிகளைக் கேட்டது இந்த காண்டத்தில் தான். ராமாயணத்தின் இப்பகுதி மந்திரத்தன்மை கொண்டது. இதைப் படிப்பவர்களுக்கு வாழ்வில் எந்த துன்பம் வந்தாலும் உடனே தீர்ந்து போகும். அன்னை சீதையின் துன்பத்தைப் போக்க அனுமன் வந்ததைப் போல, சுந்தரகாண்டம் பாராயணம் செய்பவர்களின் துன்பத்தைப் போக்கவும் அவன் ஓடிவருவான். அவனது திருவடியில் சரண் புகுந்தால் என்றும் நமக்கு பயமில்லை.

