
பூவுலகில் அதர்மம் அதிகரிக்கும் போதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட யுகந்தோறும் அவதரிப்பதாக கிருஷ்ணர் கூறியுள்ளார். ''என்னைச் சரணடைவாயாக. உன் எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுவித்து மோட்சத்தை அளிக்கிறேன்,'' என்றும் கீதையில் நமக்கு வழிகாட்டியுள்ளார்.
துவாபரயுகத்தின் இறுதியில் கிருஷ்ணர் வசுதேவருக்கும், தேவகிக்கும் எட்டாவது குழந்தையாக அவதரித்தார். அவர் பிறந்த ஊர் மதுரா. ஆய்வாளர்களின் கருத்துப்படி ஆண்டுகளுக்கு 5240 ஆண்டுகளுக்கு முன் பிறந்ததாகக் கணிக்கப்படுகிறது. துவாபரயுகம், ஸ்ரீமுக ஆண்டு, ஆவணிமாதம் தேய்பிறை அஷ்டமி நள்ளிரவில் அவர் அவதரித்தார். இதன்படி ஆங்கிலத்தேதி 4.9. 3228 (கி.மு.) வருகிறது. விஷ்ணுபுராணத்தில் 1:5:26 வது ஸ்லோகத்திலும், ஹரிவம்சத்தின் 52ம் பகுதியிலும் இதற்கான ஆதாரம் உள்ளது. மண்ணுலகில் தர்மத்தைக் காத்து அருளிய கிருஷ்ணர், 18.2.3102(கி.மு.)ல் கோலோக பிருந்தாவனத்திற்கு எழுந்தருளினார். ஆக, கிருஷ்ணர் பிறந்து (3228+2012) 5240 ஆண்டுகள் ஆகின்றன. தர்மம் என்றும் அழிவதில்லை என்பதற்கேற்ப, மகிழ்ச்சிக்குரிய அவரது பிறந்தநாளை நாம் இன்றும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

