ADDED : டிச 02, 2016 10:54 AM
மார்கழி மாத அதிகாலை வேளையில் சிவாலயங்களில் 'திருவெம்பாவை' பாடப்படுகிறது. திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் திகழும் சிவபெருமானை முன்னிலைப்படுத்தி இந்தப் பாடல்கள் அமைந்துள்ளன. இதில் 20 பாடல்கள் உள்ளன. இவை மார்கழியின் முதல் இருபது நாட்களில் பாடப்படும். கன்னிப்பெண்களான தோழிகள் அதிகாலையில் துயில் எழுந்து ஒருவரை ஒருவர் எழுப்பிக்கொண்டு சிவ வழிபாட்டிற்கு செல்லும் பின்னணியில் இப்பாடல்கள் அமைந்திருக்கும். இதைத் தொடர்ந்து வரும் பத்துநாட்களிலும் திருப்பள்ளி எழுச்சியில் உள்ள பத்து பாடல்களும் பாடப்படும். இவை மாணிக்கவாசகரால் இயற்றப்பட்டவை. திருவாசகத் தொகுப்பில் இவை உள்ளன. 'உலக வாழ்வு' என்னும் தூக்கத்தில் இருந்து விடுபட்டு, 'மோட்ச வாழ்வு' என்னும் விழிப்பு நிலைக்கு தங்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்று பக்தர்கள் இந்தப் பாடல்களின் மூலம் சிவனை வேண்டுகிறார்கள்.

