ADDED : நவ 04, 2016 11:54 AM

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழாவின் முதல் நாள் அதிகாலையில், ஹோம மண்டபத்திற்கு வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் என்ற பெயரில் முருகன் எழுந்தருளுவார். அங்கு முருகனின் வெற்றிக்காக யாகம் துவங்கும். குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன், வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்தகுருக்கள், வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், அஷ்டதிக்பாலகர்கள், துவாரபாலகர்கள் ஆகிய
தேவதைகளை கும்பத்தில் எழுந்தருளச் செய்வர். யாகம் முடிந்தவுடன் ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுவார். ஆறாம் நாளன்று வள்ளி, தெய்வானை இல்லாமல் தனித்து கடற்கரைக்கு எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்வார். அதன்பின், வெற்றி வேந்தராக வள்ளி, தெய்வானையுடன் யாகசாலைக்கு திரும்புவார். அங்கு முருகனின் பிம்பம் தெரியும்படி ஒரு கண்ணாடி வைக்கப்படும். அந்த பிம்பத்திற்கு (கண்ணாடிக்கு) அபிஷேகம் செய்யப்பட்டு முருகனை குளிர வைப்பார்கள். மறுநாள் முருகன் - தெய்வானை திருக்கல்யாணம் நடத்தப்படும்.

