ADDED : ஜூலை 24, 2020 08:58 PM
முருகனுக்கும், வேத வழிபாட்டிற்கும் தொடர்பு இல்லை என்றும், அவரை வடமொழி மந்திரங்களால் வழிபடக் கூடாது என்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூறுகின்றனர். ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பு நக்கீரரால் எழுதப்பட்ட சங்க நுாலான திருமுருகாற்றுப்படை என்னும் இலக்கியம் இக்கருத்தை மறுக்கிறது.
''மூன்று வறைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர உடீஇ,
உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கில் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏத்திப் பெரிந்து உவந்து
ஏரகத்து உறைதலும் உரியன் அதான்று''
என்னும் வரிகள், ''சுவாமிமலையில் நடந்த வழிபாட்டு முறையை விளக்குகிறது. பூணுால் அணிந்த அந்தணர்கள் யாகத்தீ வளர்த்தனர். கைகளை குவித்து ஆறெழுத்து மந்திரமான 'சரவண பவ' என்னும் பொருள் அடங்கிய வேதங்களை பாடினர். மணம் மிக்க மலர்களால் துாவியும் முருகனின் திருவடியை வணங்கினர்'' எனக் கூறுகிறது. மேலும்
''ஒருமுகம், மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே'' என்று முருகப்பெருமானின் ஆறு முகங்களில் ஒன்று அந்தணர்கள் செய்யும் வேள்வியை காக்கிறது என்ற குறிப்பும் உள்ளது. இதன் மூலம் முருகன் வேதம் போற்றும் தெய்வமாக இருக்கிறார் என்பதை அறியலாம்.