ADDED : ஏப் 15, 2011 11:18 AM
அழகர்கோவிலில் இருக்கும் காவல் தெய்வம் கருப்பணசாமி வடக்கில் இருந்து வந்ததாகச் சொல்வர். எனவே, வடக்கு நோக்கி நின்று பூஜை செய்வர். பெரியகருப்பு, சின்னகருப்பு, மண்டைக் கருப்பு, தோட்டிக்கருப்பு, கும்மட்டிக்கருப்பு, பழைய கருப்பு என மதுரை வட்டாரத்தை சுற்றியுள்ள அத்தனை கருப்பசாமிகளுக்கும், தலைமைக்கருப்பாக இருப்பவர் பதினெட்டாம்படி கருப்பு. இவரே அழகர்கோவிலில் கோயில் கொண்டிருக்கிறார். இவருக்கு உருவம் கிடையாது. கோபுரக்கதவுகளையே கருப்பசாமியாகப் பாவித்து மக்கள் வழிபடுவர். இவருக்கு பொங்கல், வடை, தேங்காய் நிவேதனம். வம்பு,வழக்கு,விவகாரம் தீர்ப்பதில் கருப்பசாமி நிகரற்றவராக விளங்குகிறார். யாரேனும் தவறு செய்ததை மறுத்தால், கருப்பசாமி மீது சத்தியம் செய்யச் சொல்வர். அவ்வாறு அவர் சத்தியம் செய்துவிட்டால் அதை யாரும் மறுத்துப் பேசுவதில்லை. பொய் சத்தியம் செய்தால் கருப்பசாமி கடுமையாகத் தண்டித்து விடுவார் என்பது ஐதீகம். அழகர்கோவில் அழகருக்கு, அபிஷேகத் துக்காக எடுத்துவரப்படும் தீர்த்தத்தை பதினெட்டாம்படி கருப்பசாமியிடம் காட்டியபின்னரே கோயிலுக்குள் கொண்டு செல்வர்.