ADDED : நவ 26, 2013 04:08 PM

பிரதோஷத்தன்று சிவன் கோயிலை வலம் வரும் முறைக்கு 'சோமசூக்த பிரதட்சிணம்' என்பர். இதை செய்ய வேண்டிய முறை எப்படி தெரியுமா?
* முதலில், சிவசந்நிதி எதிரேயுள்ள ரிஷபத்தின் கொம்பு வழியாக சிவனை தரிசிக்க வேண்டும்.
* பிறகு ரிஷபத்தில் இருந்து வலது பக்கமாகச் சென்று சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும்.
* மறுபடி அதே வழியில் (சென்ற வழியிலேயே திரும்புவது) திரும்பி, ரிஷபத்தின் கொம்பு வழியாக சிவனை வணங்க வேண்டும்.
* அடுத்து இடதுபக்கமாக அபிஷேக தீர்த்தம் விழும் கோமுகி வரை வர வேண்டும்.
* மீண்டும் அதே வழியில் திரும்பி, ரிஷபத்தின் கொம்பு வழியாக சிவனைத் தரிசிக்க வேண்டும்.
* திரும்பவும் முதலில் செய்தபடி, சண்டிகேஸ்வரரை தரிசிக்க வேண்டும்.
* அப்படியே வலமாக கோமுகி வரை வலம் வர வேண்டும், அதனருகே இருக்கும் சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும்.
* மீண்டும் இடதுபுறமாக ரிஷபம் வரை வந்து கொம்பு வழியாக சிவனைத் தரிசிக்க வேண்டும்.
சிவன் கோயிலில் வெளியே இருப்பதை நந்தி என்றும், மூலஸ்தானம் எதிரே இருப்பதை ரிஷபம் என்றும் சொல்ல வேண்டும். நந்தி சிவனின் காவலர் அல்லது பக்தர். ரிஷபம் சிவனின் வாகனம். பிரதோஷம் நீங்கலாக சோமவாரம் எனப்படும் திங்கள்கிழமைகளிலும் இவ்வாறு வலம் வரலாம். கார்த்திகை சோமவாரம் மிகவும் சிறப்பானது. சோமசூக்த பிரதட்சிணத்தை முதலில் புரிந்து கொள்ள சிரமமாயிருந்தாலும், திங்களன்றும் செய்யப் பழகி விட்டால் மிகவும் எளிமையாகி விடும்.
''வ்ருஷம் சண்டம் வ்ருஷம் சைவ ஸோமஸூத்ரம் புனர்வ்ருஷம்
சண்டம் ச ஸோம ஸூத்ரம்ச புநஸ்சண்டம் புனர்வ்ருஷம்''
என்ற ஸ்லோகத்தை நினைவில் வைத்துக் கொண்டால் வலம் வருவது எளிதாக இருக்கும்.

