ADDED : நவ 12, 2017 04:27 PM

கேரள மாநிலத்தில் உள்ள கோயில்கள் அமைப்பிலும், பூஜை முறையிலும் மாறுபட்டவை. சில கோயில்கள் வீடுகள் போன்றே காட்சி தரும். கூரைகளில் ஓடு வேயப்பட்டிருக்கும். மேல்சாந்தி எனப்படும் தலைமை பூஜாரி மட்டும் கருவறைக்குள் செல்ல, மற்ற பூஜாரிகள் வெளியேதான் நிற்பர்.
சபரிமலை கோயிலில் பாக்கிய சாலியான ஒருவரே தலைமை பூஜாரியாக பொறுப்பேற்க முடியும். மேல்சாந்தி பதவிக்கு விண்ணப்பிக்கும்படி தேவஸ்வம் போர்டு அறிவிப்பு வெளியிடும். குலுக்கல் முறையில் ஒருவரை ஐயப்பன் சன்னதியின் முன் தேர்ந்தெடுப்பர்.
பத்துபேர் தேர்வு செய்யப்பட்டால், அவர்களது பெயர்களை தனி சீட்டுகளில் எழுதி, ஒரு குடத்தில் வைப்பர். மற்றொரு குடத்தில் 'மேல்சாந்தி' என எழுதப்பட்ட ஒரு சீட்டும், எதுவும் எழுதாத ஒன்பது சீட்டுகளும் இருக்கும். ஒரு குழந்தையை அழைத்து முதல் குடத்திலிருந்து, ஒரு சீட்டை எடுப்பார். அடுத்த குடத்திலிருந்தும் சீட்டை எடுப்பர். இரண்டாவது குடத்திலிருந்து எடுக்கப்பட்ட சீட்டு வெற்று சீட்டாக இருந்தால் அவர் குலுக்கலில் இருந்து நீக்கப்படுவார். இப்படி வரிசையாக சீட்டுகள் எடுக்கப்படும். எந்த பெயருடையவரின் சீட்டும், இன்னொரு குடத்திலுள்ள மேல்சாந்தி என எழுதப்பட்ட சீட்டும் சேர்ந்து வருகிறதோ அவரே மேல் சாந்தியாக தேர்ந்தெடுக்கப்படுவார். ஐப்பசி முதல் தேதி குலுக்கல் நடக்கும். கார்த்திகை முதல் தேதி புதிய பூஜாரி நடை திறப்பார்.