
சிவபெருமானின் மாமனார் தட்சன். இவரது மகளான தாட்சாயிணியை சிவபெருமான் திருமணம் செய்திருந்தார். ஆணவம் மிக்க தட்சன் ஒருமுறை தேவர்களை எல்லாம் அழைத்து யாகம் ஒன்றை நடத்தினான். அதற்கு மருமகனான சிவனை மட்டும் அழைக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த தாட்சாயணி நியாயம் கேட்க சென்றாள். ஆனால் மகள் என்றும் பாராமல் அவமானப்படுத்தினான். யாக குண்டத்தில் விழுந்து தாட்சாயிணி உயிரை மாய்த்தாள். வெகுண்டெழுந்த சிவனின் நெற்றியில் அரும்பிய வியர்வைத் துளி வீரபத்திரராக உருவெடுத்து தட்சனை அழிக்க புறப்பட்டது. மனைவியின் உடலைச் சுமந்தபடி சிவன் உலகெங்கும் அலைந்தார். இதை தடுக்க எண்ணிய திருமால் சக்கராயுதத்தால் தாட்சாயிணியின் உடலைத் தகர்த்தார். அவளது உடல் பாகங்கள் பூமியில் பல இடங்களில் சிதறியது. அந்த தலங்களே 51 சக்தி பீடங்களாகத் திகழ்கின்றன. இதில் பிறப்பு உறுப்பான யோனி விழுந்த இடமே அஸ்ஸாம் மாநிலம் காமாக்யா கோயில். மாதம் தோறும் வரும் தீட்டுக் காலத்தில் கோயிலில் உள்ள சிறுகுழியில் உள்ள நீர் ரத்தம் போல சிவப்பாக மாறும் அதிசயம் நடக்கிறது.