
புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில், ஒரு யாகம் நடத்த ஏற்பாடானது. பண்டிதர்கள் யாகம் நடத்துவதற்காக 1961 அக்.1ம் தேதியைத் தேர்ந்தெடுத்தனர். கிரகநிலைகளின் படி அன்று காலை 7 மணிக்கு யாகசாலையில் நுழைய சரியான நேரம் என கணித்தனர். ஆனால், பாபாவோ, ''யாகம் நடத்த காலை 9.30 மணி தான் பொருத்தமான முகூர்த்தமாக இருக்கும் என நினைக்கிறேன்,'' என்றார்.
பண்டிதர்களோ, காலை 7மணி மிகச் சிறந்த முகூர்த்தம் என்று தங்களின் அபிப்ராயத்தை தெரிவித்தனர். பாபாவும் சம்மதிப்பது போல் சிரித்துக் கொண்டார்.
யாகநாளன்று, வேத பண்டிதர்கள், புட்ட பர்த்தியிலுள்ள சித்ராவதி நதியில் நீராடி விட்டு, சந்தியாவந்தனம் மேற்கொண்டனர்.
பட்டாடைகளை உடுத்திக் கொண்டு, வெள்ளிப் பாத்திரங்களில் புனிதநீர் நிரப்பி யாகசாலை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். அந்த நேரத்தில் இடியுடன் கனமழை பொழியத் தொடங்கியது. மழையில் சிக்கிக் கொண்ட அவர்களால், குறித்த நேரத்திற்கு யாகசாலைக்கு வர இயலவில்லை. மழை விட்டு, 9 மணிக்கு தான் அந்த இடத்தை விட்டு கிளம்ப முடிந்தது. அவர்கள் யாகசாலைக்குள் நுழையும் போது, மணி 9.30. பாபாவும் அதே நேரத்தில் வந்து சேந்தார். அதன்பின்பே யாகம் தொடங்கியது. பின்னால் நடப்பதை முன்னாலேயே அறியும் அவரது மகிமையை எண்ணி பண்டிதர்கள் வியந்தனர்.

