
தட்சயாகத்தின் போது, வீரபத்திரர் மீது திருமால் சக்கரத்தை ஏவினார். வீரபத்திரர் அணிந்திருந்த கபால மாலையில் இருந்த கபாலம் அதை விழுங்கி விட்டது. சக்ராயுதத்தை மீட்டு வரும்படி, விஷ்வக்சேனரை திருமால் அனுப்பி வைத்தார். முனிவர் ஒருவரின் அறிவுரைப்படி விஷ்வக்சேனர், பூலோகத்தில் காஞ்சியில் சிவனை வழிபட்டு வீரபத்திரரின் காட்சி பெற்றார். ஆனால், அவர் சக்ராயுதத்தை கபாலத்திடமே கேட்டுப் பெறும்படி கூறினார். இந்நிலையில் விஷ்வக்சேனர் தன் கை,கால்களை கோணலாக்கித் தள்ளாடி நடந்தார். அதைக் கண்டு அனைவரும் சிரிக்க, கபாலமும் சிரித்தது. அப்போது வாயிலிருந்து சக்ராயுதம் நழுவி விழுந்தது. விஷ்வக்சேனர் எடுக்கும் முன், அதை விநாயகர் எடுத்துக் கொண்டு, தனக்காகவும் ஒருமுறை விகடக்கூத்தாடினால் சக்ராயுதத்தை தருவதாகக் கூறினார். அதன்படி, விஷ்வக்சேனரும் கூத்தாடி சக்கரத்தைப் பெற்றார். சக்ராயுதத்தை வழங்கிய இந்த விநாயகர், விகடச் சக்கரவிநாயகர் என்ற பெயருடன் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் அருள்பாலிக்கிறார்.
சி.வெங்கேடஸ்வரன், சிவகங்கை

