ADDED : அக் 20, 2017 03:28 PM

தேவர்களின் தந்தையான கஷ்யப முனிவருக்கும், அசுரர்களின் தலைவனான அசுரேந்திரனின் மகள் மாயைக்கும் சூழ்நிலை காரணமாக இரண்டாம் திருமணம் நடந்தது. அவர்களுக்கு சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் உள்ளிட்ட பல அசுரர்களும், அஜமுகி என்ற மகளும் பிறந்தனர். இதில் சூரபத்மன் தவமிருந்து, சிவனின் ஆற்றலைத் தவிர வேறு யாராலும் தன்னைக் கொல்ல முடியாது என்று வரம் பெற்றான். வரத்தின் பலத்தால், தேவர்களைத் துன்புறுத்த தொடங்கினான்.
தேவர்கள் தங்களைக் காப்பாற்றும்படி சிவனைச் சரணடைந்தனர். சிவன் தன் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை உண்டாக்க, அவை சரவணப் பொய்கையில் விழுந்து குழந்தைகளாக மாறின. அந்தக் குழந்தைகளை கார்த்திகைப் பெண்கள் வளர்த்து ஆளாக்கினர். அந்த ஆறு குழந்தைகளையும், பார்வதிதேவி சேர்த்து அணைக்க ஆறு முகமும், பன்னிரு கைகளுமாக ஒரே உருவமாக மாற்றினாள். 'கந்தன்' என பெயர் பெற்ற அந்தக் குழந்தைக்கு, தன் சக்தியெல்லாம் ஒன்று திரட்டி செய்த, வேலை பரிசாக அளித்தாள்.
சக்தி வேலுடன் புறப்பட்ட கந்தன், சூரபத்மனை சம்ஹாரம் செய்து தேவர்களைக் காப்பாற்றினார். இதன் அடிப்படையில், ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாளான வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறுநாள் கந்தசஷ்டி விரதம் மேற்கொள்வர். ஆறாவது நாளான சஷ்டியன்று, முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் நடத்தப்படும்.
கணவனும், மனைவியும் சேர்ந்து சஷ்டி விரதம் மேற்கொள்ள நல்ல பிள்ளைகள் பிறக்கும் என்பது ஐதீகம்.