ஹஜ்ரத் இஜ்ராயீல் (அலை) பூமியில் இருந்து கொண்டு வந்த பிடி மண்ணின் மீது மழையைப் பொழியுமாறு இறைவன் மேகத்திற்கு ஆணையிட்டான்.
அந்த மேகம் நாற்பது நாட்கள் அல்லது நாற்பது வருடங்கள் வரை மழையைப் பொழிவித்தது. 39 மடங்கு துக்கம், வேதனை, சிரமம், கஷ்டம் கலந்த நீர் அந்த மண்மீது பொழியப்பட்டது. ஒரேவொரு பங்குதான் மகிழ்ச்சி என்ற நீர் பொழியப்பட்டது. இதன் காரணமாகத்தான் மனிதன் தன் வாழ்நாட்களில் துக்கத்தையும் வேதனையையும் அதிகம் அனுபவித்து இன்பத்தை கொஞ்சமாகவே அனுபவிக்கிறான்.
மழையின் காரணமாக மண் குழைந்தது. பின் அதனை உலர்த்திப் பண்படுத்தி அதனைக் கொண்டு மனித உருவைப் படைத்தான். இந்த மனித உருவம் நாற்பது வருடங்கள் வரை மெக்கா நகருக்கும் தாயிப் நகருக்கும் இடையில் கிடத்தப்பட்டிருந்தது. அப்பக்கம் சென்ற வானவர்கள் அந்த மனித உருவத்தை மிக அதிசயத்துடன் பார்த்துக் கொண்டே சென்றனர்.
மண்ணினால் உருவான அந்த மனித உருவத்தை தசையைக் கொண்டு போர்த்தினான். பிறகு ஆத்மாவிடம் 'இந்த உடலுக்குள் நுழைந்துகொள்' என ஆணையிட்டான். அந்த ஆத்மா உருவம் கண்கள் வழியாக உள்ளே நுழைந்ததும், உடனே கண்களை திறந்தது உருவம். அதன் பார்வையில் முதன் முதலாவதாகப்பட்டது இறைவனின் அர்ஷின் அடியில் பொறிக்கப்பட்டிருந்த 'லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்' என்ற வாசகம்தான். இதைக் கண்டதும் அந்த உருவம், ''உன் பெயருடன் மற்றொரு பெயர் உள்ளதே. யார் அது'' எனக்கேட்டது.
அதற்கு, ''அது என்னுடைய இறுதி நபியுடைய பெயர். அவர் உம் மக்களில் ஒருவராக வருவார். உம்மால் ஏதேனும் பிழை ஏற்பட்டு விட்டாலும் அவர் பொருட்டால்தான் நான் உம்மை மன்னிப்பேன்'' என்றான்.