இம்மை என்பது தற்காலிகமானது. இதில் செய்யும் செயல்களுக்கு மறுமையில் பதில் சொல்லியாக வேண்டும். இது சம்பந்தமாக ஈஸா (அலை) நபி கீழ்க்கண்டவற்றை கூறுகிறார்.'ஒரே இடத்தில் நீரும் நெருப்பும் சேர முடியாது. இதைப் போல் இறை நம்பிக்கையுள்ள மனிதனின் உள்ளத்தில் இம்மையும் மறுமையும் சேர முடியாது' என்கிறார். மேலும் அவரது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை பார்க்கலாம். ஒருநாள் ஈஸா (அலை) நபி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் ஒருவர், ''நீங்கள் வீடு கட்டிக்கொண்டு வசதியாக குடியிருக்கலாமே'' எனக் கேட்டார். அதற்கு அவர், ''நமக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் இப்படி ஆசைப்பட்டு ஆடம்பரமாக வீட்டை கட்டினார்கள். ஆனால் நற்செயல்களில் ஈடுபடாமல் வாழ்வை வீணடித்தனர். கடைசியில் கட்டிய வீட்டையும், திரட்டிய செல்வத்தையும் நினைத்து கண்ணீர் விட்டு இம்மையை விட்டு விடைபெற்று சென்றார்கள்'' என்ற உண்மையை கூறினார். நற்செயல்களில் ஈடுபட்டவர்கள் மறுமையில் வசதியான வீட்டில் நிரந்தரமாக தங்கியிருப்பர்.