
நபிகள் நாயகம் குழந்தையாக இருந்தபோது, அவரது தாத்தா அப்துல் முத்தலிப் வளர்த்தார். மூப்பின் காரணமாக தன்னால் பார்த்துக் கொள்ள இயலாது என, தன் மகன்களிடம் ஒப்படைக்க விரும்பினார்.
முதலாவதாக அபூலஹப், குழந்தையை தான் வளர்ப்பதாகக் கூறினார்.
அதற்கு அவர், ''வேண்டாம். குழந்தையை மகிழ்வோடு வளர்க்க உன்னால் முடியாது'' என்றார்.
இரண்டாவதாக ஹலரத் அப்பாஸ், குழந்தையை தான் பராமரிப்பதாக சொன்னார்.
''உனக்குக் குழந்தைகள் அதிகம். வேண்டாம்'' எனக் கூறினார்.
கடைசியாக அபூதாலிப், ''குழந்தையை வளர்க்கும் நற்செயலிற்கு நான் தகுதியானவன் என்று கருதினால், அப்பொறுப்பை ஏற்க தயாராக இருக்கிறேன்'' என பணிவோடு கேட்டார்.
அதைக் கேட்டதும், ''இதற்கு நீ பொருத்தமானவன்தான். இருந்தாலும் அந்தக் குழந்தையே அதைத் தீர்மானிக்கட்டும்'' என குழந்தையை அழைத்தார்.
''நான் அதிக நாட்கள் உயிரோடு இருக்க மாட்டேன்.
உன்னை வளர்க்க பலரும் தயாராக உள்ளனர். இவர்களில் யாருடன் இருக்க விரும்புகிறீர்'' எனக்கேட்டார்.
முகத்தில் புன்னகை தவழ அபூதாலிப் மடியில் அமர்ந்தது குழந்தை. பின் முத்தலிப் கண்ணீருடன், ''இக்குழந்தையை ஒரு குறையும் இன்றி, வளர்த்து வருவாயாக” என்றார்.

